சென்னை:தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அறிவிப்புகள், வாக்கு சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் சுவர்களில் விளம்பரங்களாக ஒட்டப்படுகின்றன. ஆனால், தேர்தலுக்குப் பிறகு சுவர்களில் ஒட்டப்பட்ட தேர்தல் அறிவிப்புகள் அகற்றப்பட்டு சிவர்கள் சுத்தப்படுத்துவது இல்லை என திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “பள்ளிகளின் சுவர்களில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சுதந்திரப் போராட்ட தலைவர்கள், தேசத்தலைவர்கள் படங்கள், கதைகள், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை தூண்டும் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் நேரங்களில் வாக்குச்சாவடியில் தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகள் ஒட்டுவதால் பள்ளி சுவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், தேர்தல் முடிந்த பிறகு, வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்திய உணவுக் கழிவுகள் மற்றும் காகிதப் பொருட்கள் அகற்றப்படுவதில்லை. இதனால், பள்ளிகள் திறந்த பிறகு ஆசிரியர்கள் தான் சுத்தப்படுத்துகின்றனர். தேர்தல் முடிந்த பின் வாக்குச்சாவடியை சுத்தம் செய்ய, எவ்வித பணமும் ஒதுக்கீடு செய்வதில்லை என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பத்துக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.