சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி, கடந்த 2018-19ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரை செலுத்தாமல் உள்ள ரூ.76 ஆயிரத்து 275 கட்டண பாக்கியை 12 சதவீத வட்டியுடன் செலுத்த மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிடக் கோரி பள்ளி நிர்வாகம் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், பள்ளி நிர்வாகம் வழங்கும் வசதிகளுக்கு ஏற்பவே கட்டணம் வசூலிக்கிறதா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண வசூல் முறைப்படுத்தல் சட்டத்தை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழக்கு முடிவுக்கு வரும் வரை எந்த விசாரணையும் மேற்கொள்வதில்லை என கட்டண நிர்ணயக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.