சென்னை:யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாகத் திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் மற்றும் அரண்வாயல் பகுதிகளில் பீர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அங்குக் கடந்த 24ஆம் தேதி ஆய்வு நடத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பல்வேறு விதிகளைப் பின்பற்றவில்லை எனக்கூறி ஆலையை மூட உத்தரவிட்டது.
மேலும், ஆலைக்கான மின் இணைப்பைத் துண்டிக்கவும், மின் வாரியத்திற்கு உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள், எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில் குமார் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் நிறுவனம் சார்பில், மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, ஆலைக்கான அனுமதி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், புதுப்பிப்பதற்காக ஆறு மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பிக்கப்பட்டதாகவும், நான்கு மாதங்களாக அதனைக் கிடப்பில் போட்ட பின்னர் எந்த வித காரணமும் சொல்லாமல் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டதாக வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 20ஆம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு, 24ஆம் தேதி ஆலையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறினார். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஆலையில் உள்ள அம்மோனியா மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு வாயுக்களைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் தெரிவித்தார். மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுட்டிக்காட்டியுள்ள குறைகளைச் சரி செய்யத் தயாராக இருப்பதாகவும் மனுதாரர் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதி அளித்தார்.
இதனையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ஆலையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதையும், ஆலை நீண்ட நாள் செயல்பட்டு வரும் நிலையில் திடீரென மூட உத்தரவிட்டால் அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஆலையை மூடும்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு, மூன்று வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: தரங்கம்பாடி கடல் அலையில் சிக்கி மணமகன், சிறுவன் பலி.. நிச்சயதார்த்த முடிந்த கையோடு நிகழ்ந்த சோகம்!