தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீசார் தாக்கியதில் கணவர் உயிரிழந்ததாக மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி! - HIGH COURT MADURAI BENCH

காவல்துறையினர் தாக்கியதில் தனது கணவர் திராவிடமணி உயிரிழந்ததாக கூறி அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2024, 9:47 AM IST

மதுரை: திருச்சியைச் சேர்ந்த ஷாலினி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தனது கணவரின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிடக்கோரி மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் திராவிடமணி தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி மாலை வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த எனது கணவரை, ஜீயபுரம் காவல்துறையினர் 63 மது பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக கூறி கைது செய்துள்ளனர்.

அதன் பின்னர், 27ஆம் தேதி திருச்சி நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் படுத்தி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றபோது, சிறை மருத்துவமனை தரப்பில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு எனது கணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

பொய் வழக்குப் பதிவு செய்து எனது கணவரை காவல் துறையினர் தாக்கியதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். என்னிடம் முறையாக தகவல் தெரிவிக்காமல் அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. அவரது உடலை முறையாக மறு உடற்கூராய்வு செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும். ஆகவே, எனது கணவர் திராவிடமணியின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 27 பேரின் நீதிமன்ற காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஜியாபுரம் காவல் ஆய்வாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "சம்பவத்தன்று 63 மது பாட்டில்களை அவர் சட்டவிரோதமாக கொண்டு சென்றபோதே கைது செய்யப்பட்டார். திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருச்சி மகாத்மா நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்" என தெரிவித்திருந்தனர்.

அதனை அடுத்து நீதிபதி, "மனுதாரரின் கணவரது உடல் செப்டம்பர் 29ஆம் தேதி மருத்துவக் குழுவினரால் உடற்கூராய்வு செய்யப்பட்டு, வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அதன் பின்னர் உடற்கூறு ஆய்வின் அறிக்கையும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை வாங்க மறுத்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

உடற்கூராய்வு அறிக்கையில் 2 உள்காயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு காயம் 4 நாட்களுக்கு முன்பாகவும், மற்றொரு காயம் 2 வாரங்களுக்கு முன்பாகவும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மறு உடற்கூறாய்வு ஏன் செய்யப்பட வேண்டும்? என்பதற்கான பொருத்தமான காரணங்கள் எதையும் மனுதாரர் குறிப்பிடவில்லை. ஆகவே, மறு உடற்கூராய்வு செய்ய தேவையில்லை" என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details