சென்னை:அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் அரசகுமார் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 2023 திருத்தங்களை கொண்டு வந்த அரசு, அதனை கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தியது.
அந்த திருத்தச் சட்டத்தின்படி, மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் அங்கீகாரம் என்பது நிரந்தரமாக இல்லாமல், குறிப்பிட்ட கால வரம்பிற்கு மட்டும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தனியார் பள்ளிகள் சட்டத்தில் இல்லாத விதிகளை அரசு கொண்டுவந்துள்ளது.
அங்கீகாரம் என்றால் அது நிரந்தரமானது. தனியார் பள்ளிகள் முறையாக செயல்படுவதை கண்காணிக்கவும், செயல்படாமல் இருப்பதை தடுப்பதற்குமே இந்த புதிய விதியை கொண்டு வந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்தாலும், தவறு செய்யும் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்ப பெறுவதற்கு ஏற்கனவே உள்ள சட்டத்தில் இடம் உள்ளது.
இதையும் படிங்க:+2 பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதினாலும் இட ஒதுக்கீடு பெற உரிமை உண்டு - ஐகோர்ட் உத்தரவு!
கடந்த 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அரசாணையில் நிரந்தர அங்கீகாரம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அரசாணைப்படி இதுவரை நிரந்தர அங்கீகாரம் வழங்காமல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த அரசாணை தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த அரசாணையை முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டது.
தற்போது தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகளின் படி தற்காலிக அங்கீகாரம் பெறுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற நிபந்தனை விதித்துள்ளது. எனவே, தமிழக அரசின் இந்த புதிய விதியை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனு குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.