சென்னை:ஈரோடு மாவட்டம், சித்தோடு காவல் எல்லைக்குட்பட்ட காளிங்கராயன் பாளையம் அருகே அண்ணா நகரில் உள்ள தனியார் கட்டடத்தில், ரகசியத் தகவலின் அடிப்படையில் பறக்கும் படையினர் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி சோதனை நடத்தினர்.
அப்போது 161 மூட்டைகளில் 24 ஆயிரத்து 150 சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர், அந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இந்த சேலைகளை, அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 20 நாட்களுக்கு முன் வாங்கி, குடோனில் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அசோக்குமார் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரியும், குடோனில் உள்ள சேலை உள்ளிட்ட பொருட்களை வெளியில் எடுக்க அனுமதி கோரியும் குடோன் உரிமையாளரான பாக்கியலட்சுமி யுவராஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழ்ப் புத்தாண்டுக்காகத் தனது ஆற்றல் அறக்கட்டளை மூலம் துப்புரவுப் பணியாளர்களுக்குப் புடவைகள் வழங்குவதற்காக,தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே புடவைகள் வாங்கப்பட்டதாகவும், தங்களிடம் ஆற்றல் அசோக் குமார் ஆர்டர் செய்திருந்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவற்றை வழங்க முடியாததால், குடோனில் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புடவைகள் வைக்கப்பட்டதற்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை எனவும் புடவைகள் வாங்கியதற்கான ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்களைக் காண்பித்தும் குடோன் சீல் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. சீலை அகற்றுமாறு ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சீலை அகற்றக் கோரி மனு அளித்ததை ஏற்க முடியாது என தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: "தருமபுரி வழியாக மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்" - சிட்டிங் எம்.பி செந்தில்குமார் தகவல்! - Dharmapuri Vande Bharat