சென்னை:சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.அரவிந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை சென்னை முதன்மை நீதிமன்றம் விசாரிப்பதற்கு அதிகாரமில்லை எனக் கூறியுள்ளார். எனவே, அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், அதற்கு காரணமான அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்" அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மனுதாரர், செந்தில் பாலாஜிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.