சென்னை: பெண் காவலர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிராக, கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக சென்னை, மதுரை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கருக்கு எதிராக துடைப்பங்களுடன் பெண்கள் திடீரென போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த பெண்களை அழைத்து வந்த அமைப்பு எது? என்பது குறித்து உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து விசாரிக்க கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவரூம் வழக்கறிஞருமான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தமது மனுவில், 'நியாயமான காரணங்களுக்காக போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரினால் அனுமதி மறுக்கப்படுவதும், உரிய அனுமதிமின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வு, இந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:அதிரடியாக நடந்த என்ஐஏ சோதனை.. இருவர் கைது - முக்கிய ஆவணங்கள் பறிமுதல்! - TN NIA Raid