தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யார் அந்த சார்? பதாகையுடன் போராட்டம்.. அதிமுக ஐடி-பிரிவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு! - MADRAS HIGH COURT

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், யார் அந்த சார்? என்ற பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக ஐடி-பிரிவு நிர்வாகிகளுக்கு, நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா
சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2025, 5:37 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, யார் அந்த சார்? என்ற பதாகையை ஏந்தி கடந்த 2024 டிசம்பர் 29ஆம் தேதி அதிமுக ஐடி பிரிவினர், சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் (Express Avenue Mall) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், அதிமுகவினர் போராட்டம் நடத்திய வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த அண்ணாசாலை காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீது, சட்டவிரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பத்மநாபன், பூவரசன் உள்ளிட்ட நான்கு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “போராட்டத்தில் தாங்கள் கலந்துக் கொள்ளாத நிலையில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடு கூடாது - காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (ஜனவரி 10) வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் முகமது ரியாஸ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். தொடர்ந்து, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ், “எந்த வித அனுமதியும் பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் மற்ற வணிக வளாகங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்துவார்கள்” என தெரிவித்தார்.

இதனையடுத்து, எதிர் காலத்தில் இது போன்று முறையாக அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒரு வார காலத்திற்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து முன் ஜாமீன் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details