சென்னை:கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த கலைமணி என்பவருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஊதிய உயர்வுடன் கூடிய பணி உயர்வு வழங்கப்பட்டு நீதிமன்ற அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு தவறாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்ற தணிக்கை குழு அறிக்கை அளித்தது. இதனையடுத்து, கூடுதலாக வழங்கப்பட்ட 91 ஆயிரத்து 988 ரூபாயை திரும்ப வசூலிக்க கடலூர் சிறப்பு சார்பு நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து கலைமணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ். தமிழ் செல்வன் ஆஜராகி, ஊதியம் நிர்ணயிக்கப்பட்டதில் மனுதாரரின் தவறு எதுவும் இல்லை எனவும், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வசூலிப்பது மனுதாரருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என வாதிட்டார். எதிர் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். ஃபக்கிர் மொய்தீன், ஊதியம் நிர்ணயிக்கப்பட்டதில் ஏற்பட்ட தவறை சரி செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதாக கூறினார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர் மீது எந்த தவறும் இல்லாத நிலையில் திரும்ப வசூலிப்பது அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தெரிவித்து கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பெண் போலீசுக்கு அரிவாள் வெட்டு.. காஞ்சிபுரத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! - lady police assault