தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்பேடா? கிளாம்பாக்கமா..? சில வாரங்களுக்கு தள்ளி வைக்கலாமே.. அவகாசம் கேட்ட அரசு தரப்பு..! - தமிழக போக்குவரத்து துறை

Private buses ply from kilambakkam: தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிப்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Private buses ply from kilambakkam
சென்னை உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 8:01 PM IST

சென்னை: சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24 ஆம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து YBM மற்றும் வெற்றி ஆகிய தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளன. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், போக்குவரத்து ஆணையரின் புதிய கட்டுப்பாடு 20 ஆண்டுகால நடைமுறைக்கு எதிரானது என்றும், கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் துவங்கிய போதும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவு காரணமாக பயணிகள் மட்டுமல்லாமல், தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்துக்கு ஆளாகியுள்ளதால் தொடர்ந்து கோயம்பேடு வரை இயக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் இன்று(ஜன.31) விசாரணைக்கு வந்தபோது, "கடந்த 24ஆம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு, இரு நாட்களில் அமல்படுத்தப்பட்டதாகவும், இந்த வழக்கு முடியும் வரை தனியார் பேருந்துகளை கோயம்பேடு வரை இயக்க அனுமதிக்க வேண்டும்" என தனியார் பேருந்து நிறுவனங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.

இதையடுத்து, தென் மாவட்டங்களில் இருந்து வரும் தனியார் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் உத்தரவை சில வாரங்களுக்கு நிறுத்தி வைக்கலாமே? என அரசு தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, இதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதற்கு அவகாசம் வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை நாளை(பிப்.1) ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் மார்ச் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் சிவசங்கர் உறுதி!

ABOUT THE AUTHOR

...view details