சென்னை: கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு உரிமை மீறல் நோட்டீஸை அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதனால் இந்த உத்தரவை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் தலைமையிலான அமர்வில், கடந்த திங்கட்கிழமை (ஜூலை 22) தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், மேல் முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தரப்பிடம் விளக்கம் கேட்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அவர்கள் தரப்புக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.