தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் இளைஞரை தாக்கிய விவகாரம்.. கவுன்சிலர் கவிதா மீது வழக்கு பாய்ந்தது! - councillor kavitha case

Congress Councillor Kavitha: கோவை மேட்டுப்பாளையத்தில் இளைஞரை தாக்கிய கவுன்சிலரின் கணவர் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

fight
வாக்குவாதம் தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 3:43 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 23வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியின் கவிதா புருஷோத்தமன் (42) இருந்து வருகிறார். இந்நிலையில், இந்த வார்டுக்கு உட்பட்ட ரயில்வே காலனி சாலையில் வசித்து வரும் கௌதம் சக்கரவர்த்தி (31) என்பவர், தங்களுடைய பகுதியில் தூய்மைப்பணி முழுமையாக மேற்கொள்ளவில்லை என சில நாட்களுக்கு முன் நகராட்சி நிர்வாகத்திடமும், முதல்வரின் தனிப் பிரிவிற்கும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்தும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் வந்து அப்பகுதியில் தங்களது பணியை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த கவுன்சிலர் கவிதா, அவரது கணவர் புருஷோத்தமன், மகன் கார்த்திக் (23), அவரது நண்பர் நசீர் (48) உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்களிடம் வேலை செய்ய வேண்டாம் என அழைத்துச் சென்றுள்ளனர். இதனைக் கண்ட கௌதம் சக்கரவர்த்தி, கவுன்சிலர் கவிதாவிடம் முறையிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கவுன்சிலர் கவிதாவிடம் கெளதம் சக்கரவர்த்தி, "வார்டை சுத்தமா வச்சுக்க முடியலன்னா, பதவியை ரிசைன் செஞ்சுட்டு போயிடுங்க" என கூறியுள்ளார். அதற்கு கவுன்சிலர் " நீ யாருடா புத்தி சொல்றதுக்கு, வார்டை சுத்தமா வச்சுக்க முடியாதுடா " என்று பேசியுள்ளார்.

மேலும், கவுன்சிலர் கவிதா கணவர் புருஷோத்தமன், மகன் கார்த்திக் உள்ளிட்ட மூவரும் கௌதமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி, இளைஞரை பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கவுன்சிலரின் கணவர் புருஷோத்தமன் கௌதமின் கழுத்தில் கைகளால் தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த கௌதம் சக்கரவர்த்தி கீழே விழுந்துள்ளார்.

பின்னர், கவுன்சிலர் கவிதா, கணவர் புருஷோத்தமன் மற்றும் அவரது மகன் கார்த்திக், அவரது நண்பர் நசீர் உள்ளிட்ட நால்வரும் இணைந்து இளைஞர் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இளைஞர் கௌதமிற்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கவுன்சிலரின் கணவர் தாக்கும் வீடியோ: இதனையடுத்து, அவரை மீட்ட உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூய்மைப் பணியை முறையாக மேற்கொள்ளாததை புகார் அளித்த இளைஞரை பெண் கவுன்சிலரின் கணவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து கௌதம் சக்கரவர்த்தி தரப்பில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் கவுன்சிலர் கவிதா (42), கணவர் புருஷோத்தமன் (57), மகன் கார்த்திக் (23) உள்ளிட்ட மூவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், கவுன்சிலர் கவிதாவின் மகன் கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் கௌதம் சக்கரவர்த்தி, அவரது தாய் பிரபாவதி (72) உள்ளிட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கோவை மேட்டுப்பாளையத்தில் குப்பைகளை நீக்கி வார்டை தூய்மையாக வைக்கக்கோரிய இளைஞரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரும், அவரது கணவரும் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்தியன் இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாமலையின் தூண்டுதலில் சூர்யா சிவா செயல்படுகிறார்" - சாட்டை துரைமுருகன் புகார் மனு

ABOUT THE AUTHOR

...view details