சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் அரக்கோணத்தில் 1 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக பாளையங்கோட்டையில் 38.9 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 20.0 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 12) முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று (ஜூலை 12) மற்றும் நாளை (ஜூலை 13) ஆகிய இரு தினங்கள் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, வருகின்ற 15ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்கள் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கானஎச்சரிக்கை: இன்று (ஜூலை 12) முதல் 15ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.