கோயம்புத்தூர்: கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள குக்கே சுப்ரமணியா பகுதியில் கடந்த மாதம் முதல் இளைஞர் ஒருவர் சாலை ஓரத்தில் படுத்துக் கிடந்துள்ளார். அவர் உணவு, தண்ணீர் இன்றி மிகவும் சோர்வுடன் இருந்ததை கவனித்த உள்ளூர் தொலைகாட்சி பத்திரிகையாளர் ஷிவ்பட், தனது நண்பரும் சமூக ஆர்வலருமான ரவி கக்கேபடவு மூலம் அங்குள்ள அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவருக்கு உணவு வழங்கி பராமரித்தனர். மேலும், அவர்களிடம் பேசிய அந்த இளைஞர், தனது பெயர் சதீஸ் எனவும், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, அவர்கள் அங்குள்ள ஈடிவி பாரத் செய்தியாளர் பிரகாஷ் மூலம், கோவை ஈடிவி பாரத் தமிழ்நாடு மூத்த செய்தியாளர் சீனிவாசனிடம் தொடர்பு கொண்டு சதீஸ் குறித்த விவரங்களை தெரிவித்துள்ளனர்.
அந்த இளைஞர் மன வளர்ச்சி குன்றி இருந்ததால் தனது முழு முகவரியும் தெரிவிக்க சிரமப்பட்டுள்ளார். அதனால், அவரது முகவரியை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எமது செய்தியாளர் சீனிவாசன், கோவையில் உள்ள ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் தலைவர் மகேந்திரனை தொடர்பு கொண்டு இத்தகவலை தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து, மகேந்திரன் இளைஞர் சதீஸிடம் தொலைபேசி மூலம் பேசி, அவரது தகவலை பெற்றுக் கொண்டார். அதன் பின்னர், கோவை ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதியில் அவரது தாயாரை தேடி உள்ளார். அப்போது, பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தெப்பக்குளம் மைதானம் பகுதிக்குச் சென்று சதீஷை பற்றி விசாரித்த போது அவரின் வீடு கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், இளைஞர் சதீஷின் தாயார் சரஸ்வதியிடம் இத்தகவலை தெரிவித்ததை அடுத்து அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும், தனது மகன் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்ற போது காணாமல் போனதாகவும், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கோவை வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.