வேலூர்:காலாவதியான மருந்துகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் வனவிலங்குகளுக்கு ஆபத்து நேரிட்டுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த அரவட்லா செல்லும் மலைப்பாதையில் பாஸ்மார்பெண்டா, அரவட்லா, கொத்தூர், கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வனத்தை ஒட்டியுள்ள நிலத்தில் விவசாயம் செய்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். மேலும் காப்பு காட்டு வழியாக ஆந்திர மாநிலத்துக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மயில்கள், மான்கள், குரங்குகள், ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன.
காப்பு காடு பகுதிகளில் சாலை ஓரத்தில் காலாவதியான அரசு மருத்துவமனை மருந்துகள், மாத்திரைகள்,ஊசிகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை மர்மநபர்கள் மூட்டை மூட்டையாக கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் வனவிலங்களுக்கு பாதிப்பு நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காலாவதியான மருந்துகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகளை மூட்டைகளை கொட்டிச்சென்ற மர்ம நபர்களை பேரணாம்பட்டு வனத்துறையினர் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மருத்துவக் கழிவுகள் கொட்டிச் சென்ற நபர்கள் குறித்து பேரணாம்பட்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.