கோயம்புத்தூர்:திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு என்பவரை மர்ம கும்பல் ஒன்று நோட்டமிட்டு வந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜன.24) நேசபிரபு வீட்டில் இருந்து வெளியே வந்ததைப் பார்த்த, பதிவெண் இல்லாத இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், நேசபிரபுவை விரட்டி சென்று அங்குள்ள பெட்ரோல் நிலையத்தில் வைத்து அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாகத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதில், படுகாயம் அடைந்த நேசபிரபு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக நேசபிரபு, மர்ம கும்பல் தன்னை நோட்டமிடுவதாகவும், அச்சுறுத்தல் இருப்பதாகவும் காமநாயக்கன் பாளையம் காவல் துறையினரிடம் கூறியும், காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர் தாக்கப்பட்ட நிகழ்விற்குக் கண்டனம் தெரிவித்து, செய்தியாளர் காவல்துறை அதிகாரியிடம் கதறிய ஆடியோவுடனான பதிவைத் தனது X சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேசபிரபு காவல் துறையினரிடம் கூறும் போது, காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும் என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.