சென்னை:தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்தநிலையில் மழைக் காலங்களில் கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களை பாதுகாப்பாக வைப்பது எப்படி? சைலன்சரில் தண்ணீர் போய்விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டூ வீலர் மெக்கானிக் காமராஜ் மற்றும் கார் மெக்கானிக் வேலாயுதம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளனர்.
டூ வீலர் மெக்கானிக் காமராஜ்:"மழை வரும் நேரங்களில் பைக்கை நிறுத்தும் செய்யும் போது தண்ணீரில் நனைந்தாலோ அல்லது சைலன்சர்க்கு மேலே தண்ணீர் வருமாறு இருந்தாலும் ஒரு மேடான இடத்தில் நமது வாகனத்தை நிறுத்துவது நல்லது. அப்படி நிறுத்தும் பொழுது சைலன்ஸரின் ஓட்டையில் ஏதேனும் துணி வைத்து அடைத்துவிட்டால் தண்ணீர் உள்ளே செல்லாது.
சைலன்சரில் தண்ணீர் போய்விட்டால் என்ன செய்ய வேண்டும்?என்ஜினுக்கு மேல் தண்ணீர் சென்று விட்டால் வண்டியை உடனடியாக ஸ்டார்ட் செய்யக்கூடாது உடனடியாக மெக்கானிக் உதவி அணுக வேண்டும். ஏனென்றால் நாங்கள் ஸ்பார்க் பிளக், ஏர் பில்டர், கார்ப்பரேட்டர் அனைத்தையும் தண்ணீர் உள்ளே செல்லாத அளவிற்கு கழட்டி அதனுள் இருக்கும் தண்ணீரை வெளியே எடுத்து எளிதான முறையில் வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுப்போம்.
நீங்கள் ஸ்டார்ட் ஆகிறது என்று வண்டியை இயக்கினால், தண்ணீர் என்ஜினுக்குள் சென்று இன்ஜின் பழுதாகிவிடும். இன்ஜினில் இருக்கும் பாகங்கள் துருப்பிடித்து விடும் அது சரியாக இருக்காது. வண்டி மழையில் நனைந்து விட்டாலோ அல்லது தண்ணீர் நிரம்பிய இடத்தில் வண்டியை ஓட்டினாலோ ஆப் கிளட்ச்(half clutch) உடன் பிரேக்கை செலுத்திக்கொண்டு சைலன்சரினுள் தண்ணீர் போகாத அளவிற்கு ஆக்சலேட்டரை ஒரே அளவிற்கு செலுத்திக்கொண்டு நாம் செல்ல வேண்டும்.
மழைக்காலங்களில் வண்டியில் கரண்ட் சம்பந்தமான வேலை மற்றும் பெட்ரோலை வெளியே எடுத்து விட்டு செய்யும் வேலையை கவனமாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது சில நேரங்களில் தவறுகள் ஏற்பட்டு நெருப்பு உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த நேரங்களில் வண்டி எரிந்து விடலாம் அல்லது நமக்கும் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இது போன்ற வேலைகளை நீங்களவே செய்வதை தவிர்ப்பது சிறந்தது.