ஈரோடு எம்பி கணேசமூர்த்தி குறித்து வைகோ பேட்டி கோயம்புத்தூர்: கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கணேசமூர்த்தி. தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே எம்பி கணேசமூர்த்தி மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கணேசமூர்த்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அதனைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த மதிமுக முதன்மைச் செயலாளரான துரை வைகோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசமூர்த்தியை நேரில் பார்த்து விட்டுச் சென்றார். பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் வந்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, "என் உயிராக நேசித்த, என் கண்ணின் மணியாகத் திகழ்ந்த ஆருயிர் சகோதரர் கணேசமூர்த்தி கல்லூரியில் படித்த காலத்திலிருந்து எனக்குத் தொடர்புள்ளது. அறிஞர் அண்ணாவை நேரில் பலமுறை சந்தித்தவர். மாணவர் இயக்கத்தில் தூணாக இருந்தவர். அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
அனைத்து மக்களின் அன்பையும் பெற்றார். நாடாளுமன்றத்திற்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அங்கும் தனது கடமைகளைச் சிறப்பாகவே செய்தார். இம்முறை கட்சியில் அனைவரும் சேர்ந்து துரை வைகோவை அனுப்ப வேண்டும், கணேசமூர்த்திக்கு அடுத்த வாய்ப்பு பார்ப்போம் என்று கூறினார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு ஓட்டெடுப்பு எல்லாம் நடத்தப்பட்டது. அதில் 99 விழுக்காடு பேர் துரை வைகோவை நிறுத்த வேண்டும் என்றார்.
கணேசமூர்த்தி வேண்டாம் என்பதற்காக இல்லை. 2 சீட்டுகள் வாங்குங்கள், அதில் ஒன்றை கணேசமூர்த்திக்கும், ஒன்றைத் துரை வைகோவுக்குக் கொடுப்போம் என்று கூறினார்கள். அது போன்றே செய்யலாம் என்று கூறினேன். அப்படியே வாய்ப்பில்லாமல் போனாலும், ஒரு வருடத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்எல்ஏவாக நிற்க வைக்கலாம் என்று எண்ணினேன். இல்லையெனில் அதை விடப் பெரிய பதவியை ஸ்டாலினிடம் கேட்டு அவருக்கு வாங்கி தரலாம், சட்டமன்ற தேர்தல் வரும்பொழுது அந்த காயம் எல்லாம் ஆரிவிடும் என்று நினைத்தேன்.
ஆனால் கணேசமூர்த்தி சோகத்திலிருந்தது போல் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வீட்டிலிருந்த நபர்களிடம் பேசியதாகக் கூறுகின்றனர். எந்த வித பதற்றமும் இல்லாமல் மருத்துவரிடம் பலமுறை பேசியுள்ளார். அதன் பிறகு தான் தென்னை மரத்திற்குப் போடுகின்ற நஞ்சினை கலந்து குடித்திருக்கிறார். பிறகு அங்கு வந்த கபிலனிடம் இதைக் கூறி நான் போய் வருகிறேன் என்று சொன்னாராம். அதனைத் தொடர்ந்து உடனடியாக ஈரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.
அங்க முதலுதவி சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 50 சதவிகித வாய்ப்புகள் தான் உள்ளது என்ற நோயாளிகள் எல்லாம் இங்கு வந்து பிழைத்துள்ளார்கள். அவருக்கு இரத்த அழுத்தம் குறைகிறது, அதனால் சடேஷனில் வைத்துள்ளோம் என்ற மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். அனைவரும் நம்பிக்கையுடன் இருப்போம் என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். இரண்டு நாள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் தேர்தலில் போட்டி..திமுகவின் ஊழல் பட்டியல் ரெடி' - ஈபிஎஸ் ஆவேசம் - Edappadi K Palaniswami