சென்னை: அண்ணா நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா. முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது, “நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றது. இந்தியா கூட்டணி அணியை முன்னெடுத்து செல்வதற்கு திமுக முயற்சி எடுத்து வருகிறது. இந்தியா கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லாத மாநிலம் தமிழ்நாடு.
2026 சட்டமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை இந்திய கூட்டணி பெறும். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன்மை செயலாளர் துரை வைக்கோ மிகப்பெரிய வெற்றி பெற்றார். அதில் திமுகவின் பங்கு மிகப் பெரிய அளவில் உள்ளது. திமுகவின் அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் அனைவரும் சொந்த கட்சியினர் போன்று வேலை செய்து மிகப் பெரிய வெற்றியை தேடி தந்தார்கள்.
மத்திய பட்ஜெட் மிகப்பெரிய மோசடி. அது கானல் நீர் போன்றது, அவை ஓரவஞ்சனையாக செயல்படுகிறது.பாஜக அரசின் மத்திய பட்ஜெட்டை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும் மதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். குஜராத் மீனவர்களுக்கு பாப்பு ஏற்பட்டால் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு பாதுகாக்கிறது. தமிழக மீனவர்களும் இந்திய பிரஜைகள் என்பதை மத்திய அரசு மறந்துவிட்டது.