திருச்சி:நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்.19 தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சி சார்பிலும் வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் உள்ள பிரச்சினை குறித்தும் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானால் என்னென்ன மேம்பாடு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். திமுக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக போட்டியிடுகிறது. மதிமுக வேட்பாளராக வைகோவின் மகன் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள மதிமுக தேர்தல் பணிமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக் குரல் கொடுப்போம். மணல் அள்ளுவதற்குத் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள தடை உத்தரவை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.
திருச்சி, புதுக்கோட்டை ஆகிய இரண்டு இடங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும். திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க திமுகவுடன் இணைந்து சிறப்புத் திட்டங்கள் இயற்றப்படும். பெல் தொழிற்சாலை நலிவிலிருந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருவரங்கத்தில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுப்போம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.