தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையின் புதிய முயற்சி.. என்ன தெரியுமா? - Safety for Senior Citizens - SAFETY FOR SENIOR CITIZENS

Mayiladuthurai Police Are Meeting Senior Citizens: வீடுகளில் தனியே வசிக்கும் மூத்த குடிமக்களை குறிவைத்து குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையினர் மூத்த குடிமக்களை கண்டறிந்து, அவர்களின் வீடுகளுக்குச் சென்று நலம் விசாரித்து, பாதுகாப்பையும் உறுதி செய்து, காவல்துறையால் வழங்கப்பட்ட பட்டா புத்தகத்தில் கையெழுத்துட்டு வருகின்றனர்.

மூத்த குடிமக்களை போலீசார் சந்தித்த புகைப்படம்
மூத்த குடிமக்களை போலீசார் சந்தித்த புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 10:23 PM IST

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் வீடுகளில் தனியே வசிக்கும் மூத்த குடிமக்களைக் குறிவைத்து குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், காவல்துறை பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா உத்தரவின்படி, வீடுகளில் தனியே வசிக்கும் மூத்த குடிமக்கள் குறித்து காவல்நிலையம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மூத்த குடிமக்களை போலீசார் சந்திக்கும் காட்சிகள், மூதாட்டி செல்வகுமாரி பேட்டி (credits - ETV Bharat Tamil Nadu)

இதற்காக மூத்த குடிமக்கள் ரெஜிஸ்டர் ஒன்றை நிர்வகித்து, அதன்படி அந்த மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை போலீசார் சென்று, அந்த வீட்டில் வசிக்கும் முதியவர்களைச் சந்திப்பதுடன், அந்த வீட்டில் ஏற்கனவே காவல்துறையால் வழங்கப்பட்ட பட்டா புத்தகத்திலும் கையெழுத்திட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மயிலாடுதுறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தனியே வசிக்கும் மூத்த குடிமக்களை, மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரியா சந்தித்து அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மயிலாடுதுறை திருமஞ்சன வீதியில் வசிக்கும் காந்தி (72) - செல்வகுமாரி (72) தம்பதியின் மகள் அமெரிக்காவிலும், மகன் சென்னையிலும் உள்ளதால், தம்பதியினர் இருவர் மட்டும் வீட்டில் தனியே உள்ளனர்.

அவர்களைச் சந்தித்த காவல் ஆய்வாளர் சுப்ரியா, அவர்களுக்கு பழங்கள் வழங்கி நலம் விசாரித்ததுடன், வீட்டின் முன்பு இரவு நேரத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சப்தம் கேட்டால் கதவைத் திறக்க வேண்டாம் என்றும், பட்டா புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள காவல் நிலைய எண்ணைத் தொடர்பு கொண்டு உடனடியாக புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், வீட்டிற்கு வந்து உறவினர் போல் நலம் விசாரித்துச் சென்ற போலீசார் வீட்டின் உரிமையாளர் காபி போட்டுக் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வீட்டில் தனியே வசித்து வரும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல், ஆறுதலாக பேசிச் சென்றது தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது என மூதாட்டி செல்வகுமாரி தெரிவித்தார்.

இதேபோல், சீனிவாசபுரம் காமராஜர் தெருவில் வசிக்கும் லில்லி நகோமி (89) என்ற மூதாட்டியையும் காவல் ஆய்வாளர் சுப்ரியா சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மாவட்ட காவல்துறையின் இந்த முன்னெடுப்பு மூத்த குடிமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்! - வானிலை மையம் எச்சரிக்கை! - Remal Cyclone

ABOUT THE AUTHOR

...view details