நாதக வேட்பாளர் குற்றச்சாட்டு மயிலாடுதுறை: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் காளியம்மாள் என்பவர் போட்டியிடுகிறார். இவர் நேற்று மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள், இரண்டாவது முறையாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். வேட்பு மனுவிற்கான பணத்தை கட்டி மாவட்ட ஆட்சியர் முன்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக நான்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்ற விதியின் அடிப்படையில், ஏதாவது காரணத்திற்காக ஒரு வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டால், மற்றொரு வேட்பு மனு மூலம் தேர்தலில் போட்டியிடலாம் என்ற வியூகத்தின் அடிப்படையில், இரண்டாவதாக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். மாற்று வேட்பாளராக அவரது சகோதரி சுருதியும் வேட்பு மனுதாக்கல் செய்தார். நாளையும் இரண்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யவுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள், "மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட நேற்று முதல் கட்டமாக மனுத் தாக்கல் செய்தேன். இன்று இரண்டாவது கட்டமாக மனுத் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
நாளையும் மனுத் தாக்கல் செய்யவுள்ளேன். ஏனெனில், தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியை ஒரு பெரிய நெருக்கடிக்குத் தள்ளும் வகையில் பாஜக, திமுகவினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி இருக்கவேக் கூடாது என ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லியது போல, ஒரு பெரிய திட்டம் தீட்டி நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர்.
குறிப்பாக, எந்தவொரு ஆதரமும் இல்லாமல் என்ஐஏ மூலம் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் கிடைக்கப் பெறவில்லை, எனவே நாம் தமிழர் கட்சியின் மன உறுதியை குலைக்கும் வகையில், கட்சியின் கரும்பு விவசாயிகள் சின்னத்தை முடக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 4 தேர்தல்களை இந்தச் சின்னத்தின் மூலம் சந்தித்து, மக்கள் மனதில் நன்கு பதிந்துள்ளது. தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சியாக இருக்கக் கூடிய நாம் தமிழர் கட்சியின் சின்னத்தைப் பிடுங்கி, ஏதோ ஒரு லெட்டர் பேட் கட்சிக்கு கொடுத்து தேர்தல் ஆணையம் வஞ்சனை செய்துள்ளது.
இத்தகைய செயல்பாடு எங்களுக்கு பயத்தைக் கொடுத்துள்ளது. எப்போது வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய இவர்கள், வேட்பு மனுவை நிராகரிக்க எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் மனுக்களை தாக்கல் செய்கிறோம்.
காளியம்மாள் என்ற பெயரில், வேறு ஒரு வேட்பாளரை மனுத் தாக்கல் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் எங்களுக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை. ஏராளமான மக்கள் பணிகள், போராட்டங்கள் செய்து தான் நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
மயிலாடுதுறை தொகுதிக்கு இதுவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பது (தற்போது மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிக்கப்பட்டுள்ளார்), அவர்களிடத்தில் உள்ள பயத்தைக் காட்டுகிறது. வேட்பாளரை அறிவிக்க முடியாத நெருக்கடி நிலையில் தான் திமுக, காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது. காங்கிரஸ் எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ, அங்கெல்லாம் நாங்கள் நின்று, அவர்களை அடிப்போம் என்ற பயம் அவர்களுக்கு உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராக நீங்க போய் நில்லுங்க, வேணாங்க நீங்க போய் நில்லுங்க என சண்டை நடத்து வருகிறது. முன்பு சீட் கேட்டு பிரச்னை நடக்கும், ஆனால் தற்போது யாராவது நிக்க மாட்டீங்களா என சீட்டு குலுக்கி போடுகிறார்கள். உண்மையில் அவர்களைப் பார்த்தால் பாவமாக உள்ளது. அவர்களை நாங்கள் கைப்பிள்ளை போன்று பார்க்கிறோம், திமுகவுக்கு எதிர்கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் உள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிங்க:மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிப்பு! - Mayiladuthurai CandidateR Sudha