மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் பேட்டி மயிலாடுதுறை:இன்னும் சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் 2024 நடைபெற உள்ளது. ஆனால் தற்போது தேர்தல் ஆணையம், தேர்தல் நடைபெறும் தேதியை அறிவிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியினர் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தொடர்ந்து மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் காளியம்மாள் நேற்று (மார்ச் 4) சீர்காழிப் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதைத் தொடர்ந்து செய்திகளைச் சந்தித்த வேட்பாளர் காளியம்மாள், "சிறு வயது முதல் இம்மண்ணில் பல்வேறு பிரச்சினைகளைப் பார்த்து வருகிறேன். இந்த மண்ணிலிருந்து வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற அதிமுக, காங்கிரஸ், திமுக என எந்தக் கட்சியாலும், இப்பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. அதுவும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பியைக் காணவில்லை என்ற சுவரொட்டிகளைச் சமீபமாகக் காண முடிகிறது.
காவிரி பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் பிரச்சினை போன்று என் நிலத்தையும் வளத்தையும் காக்க இவர்கள் யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். அப்படியானால் யார் பேசுவது என்றால்?. நம் பிரச்சனைக்கு நாம்தான் குரல் கொடுக்க வேண்டும் என மக்களின் ஒருவராக, சாதாரணக் குடும்பத்தில் பிறந்த நான் இத்தொகுதியில் போட்டியிடுகிறேன். இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை இந்த அரசு கொடுக்கவில்லை.
வளம் சார்ந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனை நெறிப்படுத்தினாலே இப்பகுதியில் பொருளாதாரப் பிரச்சனை, விவசாயப் பிரச்சனை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பிரச்சனைகள் போன்றவை தீர்க்கப்படும். இப்பகுதியில் நிலம் வளம் சார்ந்த காகிதத் தொழிற்சாலை, பால் பண்ணை, பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது. அவைகள் திறக்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கிட உறுதி செய்வோம்.
100 நாள் வேலைத் திட்டத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்ய வேண்டும். கடற்கரைப் பகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை. கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு 4.5 லட்சம் ஹெக்டேர் கடல் பரப்பை விற்று விட்டதாகக் கூறுகிறார்கள். இதுகுறித்த பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பேசவில்லை. காவிரியில் குறுக்கே அணை கட்டுவோம் என கர்நாடக எம்.பி. கூறுகிறார். ஆனால் திமுக எம்.பிக்கள் 39 பேரும் இது குறித்து மறுத்துப் பேசவில்லை. ஆதரித்துக் கையெழுத்திட்டுத் தான் வந்தனர்.
தேர்தலில் 6.7 விழுக்காடு வாங்கியுள்ள கட்சி இது, கூடுதலாக 1.3 விழுக்காடு வாங்கி இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறக் கூடிய ஒரு கட்சி. இதுவரை 5 தேர்தல்களை எதிர்கொண்டுள்ளோம். இரண்டு தேர்தல்களை எதிர்கொண்ட மக்கள் நீதி மையத்திற்கு டார்ச் லைட் சின்னத்தைக் கொடுத்த தேர்தல் ஆணையம். நாம் தமிழர் கட்சிக்கு ஏன் பாரபட்சம் காட்டுகிறது.
பாஜக திட்டமிட்டுத் தேர்தல் ஆணையம் மூலம் சின்னத்தை முடக்கி வைத்துள்ளனர். அமலாக்கத்துறை சோதனை நடத்தி மிரட்டிப் பார்த்தனர். தற்போது சின்னத்தை முடக்கி வைத்துள்ளனர். விவசாயி சார்ந்த பிரச்சினைகள், மக்கள் பிரச்சனைகளைப் பேசி தமிழ்நாட்டில் மூன்றாவது இடத்திற்கு நாம் தமிழர் கட்சி வந்துள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாத பாஜக, தமிழ்நாட்டில் தன்னை பெரிய கட்சியாக மக்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக, 4வது இடத்திலிருந்து முன்னேறுவதற்காகத் திட்டமிட்டு இந்த வேலையைச் செய்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களை எனப் பல தேர்தலை நாங்கள் அணுகியுள்ளோம். ஆனால் இரண்டு வருடங்களே ஆன ஒரு கட்சிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கி உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான கர்நாடகத்தில் உள்ள ஒரு லெட்டர் பேடு கட்சிக்கு அந்தச் சின்னத்தை ஒதுக்கி உள்ளனர். முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததாகக் கூறும் தேர்தல் ஆணையம் எத்தனை நிமிடங்கள் முன்னுரிமை என வெளிப்படையாகக் கூற வேண்டும்.
முதலில் எங்களுக்குச் சின்னத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஆண்டாண்டு காலமாக உதயசூரியன், இரட்டை இலை சின்னங்களை வைத்து மக்களைத் திசை திருப்பி வைத்திருந்ததோடு, இது நல்ல கட்சியா, நல்ல வேட்பாளரா, மக்களுக்கு நன்மை செய்வார்களா? என எதுவும் பார்க்காமல் சின்னம் தான் பிரதானம் என வைத்திருந்தனர்.
எங்களுக்குச் சின்னமே எங்கள் அண்ணன் தான். தேர்தல் ஆணையம் கூறியது போல் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டு விவசாயிக்குப் பாதுகாப்பாக உள்ள நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் இயற்கையாகவே கிடைத்திருந்தது. அதனை பாஜக அபகரித்து வைத்துக் கொண்டுள்ளது. சீப்பை மறைத்தால் கல்யாணம் நின்று விடும் என நினைக்கிறார்கள்.
எங்களுடைய சின்னம், எங்களுடைய அடையாளமாக எங்களுடைய தலைவர் உள்ளார். இரண்டு மணி நேரம் போதும் மக்களிடம் நாங்கள் சின்னத்தைக் கொண்டு செல்லவோம். அதையாவது உருப்படியாக முன்கூட்டியே விட்டு விடுங்கள் என்று தான் நாங்கள் கூறுகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாந்தனின் உடல் இலங்கையில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நல்லடக்கம்..கதறி அழுதத் தாய்..!