மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கிள்ளியூர் ஊராட்சி மற்றும் மாத்தூர் ஊராட்சி இடையே மஞ்சளாற்றிலிருந்து பிரிந்து மஞ்சள் வாய்க்கால் செல்கிறது. கிள்ளியூர் ஊராட்சியில் வசிக்கும் ஏராளமான விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் மாத்தூர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது.
பல நூறு ஏக்கரில் விவசாயம்:சுமார் 300 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் அந்தப் பகுதியில் உள்ளது. இந்நிலையில், சாகுபடிக்காக தங்கள் நிலங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால், மஞ்சள் வாய்க்கால் கடந்து சென்றால் சில மீட்டர் தூரத்திலேயே சென்று விடலாம். இதற்காக மூங்கில் பாலம் ஒன்றை அமைத்த விவசாயிகள், பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
தற்போது இந்த மூங்கில் பாலம் சிதிலமடைந்து விட்டது. இதனால் ஐந்து கிலோ மீட்டர் தூரம் கிள்ளியூர், வெள்ளைத்திடல் மற்றும் மாத்தூர் ஊராட்சி படுகை கிராமம் வழியாக சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, இங்கு வடிகால் மற்றும் பாசன வாய்க்கால் உள்ளதால், தண்ணீர் அவ்வப்போது வந்து செல்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குச் செல்வதற்கு ஆபத்தான நிலையில், மார்பளவு தண்ணீரில் வாய்க்காலைக் கடந்து விளைநிலங்ளுக்குச் சென்று வருகின்றனர். இருப்பினும், தங்கள் விளைநிலங்களுக்கு அறுவடை செய்த நெல்லையும் கொண்டு வருவது மற்றும் டிராக்டர் போன்ற இயந்திரங்களையும் வயல்களுக்கு கொண்டு செல்ல, சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் சுற்றியே செல்ல வேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனைபட தெரிவிக்கின்றனர்.