சென்னை: மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி-யாக இருப்பவர் ஆர்.சுதா. இவர் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராகவும், வழக்கறிஞராகவும் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவு 1.30 மணி அளவில், எம்பி சுதா டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டு, சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் அவருடைய வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது, விமான நிலைய டோல்கேட்டில் எம்.பி சுதாவின் காரை டோல்கேட் கீப்பர்கள் நிறுத்தி பார்க்கிங் கட்டணம் செலுத்தி விட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்கள். ஆனால், எம்பி சுதா தான் நாடாளுமன்ற உறுப்பினர். தனக்கு பார்க்கிங் கட்டணம் கிடையாது என்று கூறியதாக தெரிகிறது. அதை ஏற்றுக் கொள்ளாத டோல்கேட் கீப்பர்கள் கண்ணியக் குறைவாக மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து எம்.பி சுதா டோல்கேட் சூப்பர்வைசரை தொடர்பு கொண்ட போது அவரும் மிகவும் தரக்குறைவாக பேசியதோடு டோல் கட்டணம் செலுத்தி விட்டு தான் போக வேண்டும் என்று கூறி விட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பன் + க்ரீம் என புதிய விளம்பரத்தை வெளியிட்ட அன்னபூர்ணா ஹோட்டல்!
நாடாளுமன்ற உறுப்பினராகிய தனக்கு சென்னை விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து எம்பி சுதா சென்னை விமான நிலைய எக்ஸ் பக்கத்தில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்துக்கும் புகார் செய்துள்ளார்.
அந்தப் புகாரில், அவர் சென்னை விமான நிலைய டோல்கேட்டில் எனக்கு ஏற்பட்டுள்ள இரண்டாவது சம்பவம் இது. நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்று தெரிந்தும் என்னை அவமதிக்கும் விதத்தில் நெடுஞ்சாலை வழிப்பறிக் கொள்ளையர்கள் போல் அதிகாலை 1:30 மணி அளவில் நடந்து கொண்டனர். என்னை மிகுந்த அவமதிப்புக்குள் ஆளாக்கினார்கள் என்று சரமாரியாக குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
அந்தக் குற்றச்சாட்டுக்கு, அதே எக்ஸ் தளத்தில் சென்னை விமான நிலைய அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். அதில், ''உங்களுக்கு நடந்துள்ள இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. டோல் கட்டணம் வசூலிக்கும் ஏஜென்சி தனியார் நிறுவனம். உங்களுக்கு நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து நாங்கள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம். நடந்த சம்பவத்திற்கு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்