மயிலாடுதுறை:காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி, முப்பது நாட்கள் நடைபெறும் துலா உற்சவம் மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற விழாவாகும். இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் 29 நாட்கள் உள்ள நிலையில் புரட்டாசி மாதம் 31ஆம் தேதி அன்று துலா உற்சவ முதல் தீர்த்தவாரி நடைபெற்றது. 19 ஆண்டுகளுக்குப்பின் புரட்டாசி 31 ஆம் தேதி மீண்டும் முதல் தீர்த்தவாரி நடைபெறுவதால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இன்று விழாவின் 30 நாள் மாயூரநாதர், வதான்யேஸ்வரர், ஐயாரப்பர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இருந்து சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த நிகழ்வானது காவிரியில் மதியம் 1:30 மணி அளவில் நடைபெற்ற நிலையில் காவிரியின் தென்கரையில் மாயூரநாதர், ஐயாரப்பர், துலாக்கட்டம் காசி விஸ்வநாதர், தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டனர். வடக்கு கரையில் வதான்யேஸ்வரர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.
இந்த விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் மடாதிபதி 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இருக்ககறைகலிலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு கடை முகத்தீர்த்தவாரி நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் காவிரியில் புனித நீராடினர். பின்னர் சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவை முன்னிட்டு பதுகாப்பு கருதி அதீநவீன கேமரா 32 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.