சென்னை:தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க், தனி செயலாளர், இளநிலை நிர்வாகி, வரவேற்பாளர், பால் பதிவாளர், ஆய்வக உதவியாளர், பில் கலெக்டர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், வன பாதுகாவலர், காவலர், இளநிலை ஆய்வாளர் ஆகிய பதவிகளை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது.
இதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியிட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கியது. இந்த தேர்வு எழுத 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக இருக்கும் நிலையில், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்பில் முடித்தவர்கள் என உயர்கல்வி தகுதி பெற்றவர்களும் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு:இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கப்பட்டு, மதியம் 12.30 மணி வரை மூன்று மணி நேரம் கொள்குறிவகை தேர்வாக நடைபெற்றது.
OMR தாளில் விடைகளை நிரப்புதல்:தேர்வர் ஒவ்வொரு வினாவிற்கும் விடைத்தாளில் ஒரு வட்டத்தை மட்டும் கண்டிப்பாக நிரப்ப வேண்டும். ஒரு குறிப்பிட்ட வினாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்கள் நிரப்பப்பட்டிருந்தால், அவற்றுள் ஒரு விடை சரியானதாக இருந்தாலும், அவ்விடையானது தவறான விடையாகக் கருதப்படும்.
தேர்வருக்கு ஏதாவது ஒரு வினாவிற்கு விடை தெரியவில்லை எனில் (E) என்ற வட்டத்தை அவசியம் நிரப்ப வேண்டும். எப்படியாயினும், ஒரு கேள்விக்கு ஒரே விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மொத்தம் எத்தனை வினாக்களுக்கு முறையே (A) (B) (C) (D) மற்றும் (E) விடைகளை நிரப்பியுள்ளார் என்ற விவரங்களை OMR விடைத்தாளின் அதற்குரிய கட்டங்களில் எழுதுவதுடன், தொடர்புடைய வட்டங்களையும் தேர்வர்கள் நிரப்ப வேண்டும்.