திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் சிப்காட்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. அதில், சுமார் 25 வருடங்களாக Zen என்ற பெயிண்ட் கம்பெனியும் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று (மே 31) மாலை சுமார் 4 மணியளவில் Zen பெயிண்ட் கம்பெனியில் திடீரென்று தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் பேட்டி (Credits - Etv Bharat Tamil Nadu) மேலும், கம்பெனியில் உள்ள கெமிக்கல் பெயிண்ட் பேரல்கள் தீப்பிடித்து அதிக சத்தத்துடன் எரிந்த இந்த விபத்தில், தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஷோபனா(31), சுகந்தி(56), புஷ்கர்(40) மற்றும் கடம்பத்தூரைச் சேர்ந்த பார்த்தசாரதி(45) ஆகிய 4 பேரும் சிக்கியுள்ளனர்.
இதில் ஷோபனா மற்றும் லேசான காயங்களுடன் உயிர் தப்பித்து, தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். தற்போது, இறந்தவர்கள் உடல்கள் கருகிய நிலையில் எலும்புக்கூடுகளாக இருப்பதால் அடையாளம் காண இயலவில்லை எனவும், நான்காவது நபரை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து மின்சார வயர்கள் கருகி ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, 3-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தண்ணீர் மற்றும் ரசாயன உபகரணங்களைக் கொண்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், கனரக இயந்திரங்களைக் கொண்டு கம்பெனி சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் அகற்றி விபத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த தொழிற்சாலையில் மொத்தம் 6 பேர் வேலை செய்து வருவதாகவும், அதில் இருவர் விடுப்பு எடுத்திருந்த நிலையில், 4 நபர்கள் மட்டும் வேலையில் செய்து கொண்டிருந்த போது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேலும், தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பொழுது, அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சீனிவாசன்(37) தந்தையார் பெயர் இருசப்பன் என்ற ஒருவர் தொழிற்சாலையின் கனரக இரும்பு ஆங்கில் மற்றும் தொழிற்சாலையின் சுவர்கள் அவர் மீது விழுந்ததில் அவரும் இறந்துள்ளார்.
தற்போது சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், "தொழிற்சாலையில் 4 நபர்கள் பணியில் இருந்துள்ளனர். ஷோபனா என்பவர் மட்டும் உயிர் தப்பித்த நிலையில், இருவரின் உடல்கள் தீயில் கருகிய நிலையில் எலும்புக்கூடுகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆணா? பெண்ணா? என்று அடுத்த கட்ட விசாரணையில் தெரியவரும்.
மற்றொருவரின் நிலை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. அவரின் உடல் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கிறதா? என்று தேடிவருகின்றனர். மேலும், தீ விபத்தின் போது, சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சீனிவாசன் என்பவர் தொழிற்சாலையின் சுவர்கள் மற்றும் இரும்பு ஆங்கில் விழுந்ததில் இறந்துள்ளார்.
விபத்திற்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் உடல்கள் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். மேலும் அவர்களுக்கு அரசின் சலுகைகளும் பெற்றுத் தரப்படும் என உறுதியளித்தார். மேலும், விபத்து ஏற்பட்ட கம்பெனி நிர்வாகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சுவாதி மலிவால் வழக்கு: பிபவ் குமார் காவல் 14 நாட்கள் நீட்டிப்பு!