தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாஞ்சோலை தொழிலாளர்கள் மறுவாழ்வு கோரிய வழக்கு: நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! - MANJOLAI ESTATE CASE

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மறுவாழ்வு கோரி தொடரப்பட்ட வழக்குகள் நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 10:48 PM IST

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, ராஜன், பாபநாசம், சந்திரா, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பிபிடிசி நிறுவனம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நிறுவனம் வழங்கும் இழப்பீட்டுத் தொகை வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருக்காது.

ஆகவே, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதோடு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரவும், அரசு பணியை குடும்பத்தில் ஒருவருக்கு வழங்கவும், குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவசமாக வழங்கவும் வேண்டு.

மேலும், தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசின் 'TAN TEA' தன் பொறுப்பில் எடுத்து நடத்தி, அங்கிருக்கும் பணியாளர்களுக்கு பணியைத் தொடரும் வாய்ப்பளிக்க உத்தரவிட வேண்டும். அதோடு இந்த வழக்கு முடியும் வரை மாஞ்சோலை பகுதி தொழிலாளர்களுக்கான தண்ணீர், மின் வசதி உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வழக்கு முடியும் வரை அவர்களை மாஞ்சோலையிலிருந்து வெளியேற்ற தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

தொடர்ந்து வழக்கு நடந்து வந்த நிலையில், இந்த வழக்கு இன்று (அக்.23) மீண்டும் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தரப்பில், "மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை, அரசு சார்பில் பயிற்சி அளித்து, அங்கேயே வசிக்க அனுமதிக்க வேண்டும். பிபிடிசி நிறுவனம் அங்குள்ள தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி VRS பெற செய்துள்ளனர்.

மேலும், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பிபிடிசி நிறுவனம் மூடி பல மாதங்கள் ஆகி விட்டது. தீபாவளி வரும் நிலையில், அங்குள்ள வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் தீபாவளி ஊக்கத் தொகை வழங்க பரிசீலிக்க வேண்டும்" என்று முறையிட்டனர்.

இதையும் படிங்க:மாஞ்சோலை விவகாரம்; காப்புக்காடாக அறிவித்ததை ரத்து செய்யக்கோரி மனு!

அதனைத் தொடர்ந்து வன ஆர்வலர்கள் தரப்பில், "மாஞ்சோலை வனப்பகுதி புலிகள் காப்பகமாக உள்ளது. அகஸ்தியர் மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. கேரளாவில் முண்டக்கல், சூரமலா பகுதிகளில் நில சரிவு ஏற்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் நிகழ்கிறது. இதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதுமட்டும் அல்லாது, மேற்கு தொடர்ச்சி மலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தொழிலாளர்கள் நலன் முக்கியமாக இருந்தாலும், அதேசமயத்தில் சுற்றுச்சூழலும், வனசூழலும் முக்கியம். தேயிலை வன பயிர் கிடையாது. மாஞ்சோலை பகுதிகளில் மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும்" என கூறினர்.

இதனை அடுத்து, மனித உரிமை ஆர்வலர் தரப்பில், "வணிக நிறுவனங்களுக்கும், மனித உரிமைகளுக்கான கடமை உள்ளது. அதற்கான கோட்பாடுகள் ஐ.நா-வில் வகுக்கப்பட்டுள்ளது. அதை நீதிமன்றத்தில் முன் வைக்க விரும்புகிறோம்" என கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, "அனைத்து வாதங்களையும் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது" என கூறிய நீதிபதிகள் மனு மீதான விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details