விருதுநகர்:நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு 3வது முறையாக வெற்றி பெற்றார். இந்த நிலையில், விருதுநகர் தொகுதியில் 3வது முறையாக வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர், சட்டமன்ற தொகுதி வாரியாக தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
மாணிக்கம் தாகூர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிவஞானபுரம் கிராமத்திற்குச் சென்று மாணிக்கம் தாகூர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர் சீனிவாசன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும், நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "மக்களைப் பொறுத்தமட்டில் தீர்ப்பு அளித்து இருக்கிறார்கள், மக்களுடைய தீர்ப்பை தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் ஏற்றுக்கொள்ளாமல் புலம்புவது என்பது நியாயம் அற்றது எனத் தெரிவித்தார். மேலும், மக்களின் தீர்ப்பை ஏற்று மக்கள் பணிகளில் தொடர்ந்து கொண்டிருப்பதாகத தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் பாஜகவின் கையில் உள்ளது எனவும், பாஜகவின் கூட்டணியில் அன்புமணியும் இருக்கிறார். மேலும், தேர்தல் ஆணையம் என்பது பிரதமர் மோடி, அமித்ஷா சொல்வதைக் கேட்டு நடக்கும் ஆணையமாக மாறி பல நாட்களாக ஆகிவிட்டதாகக் கூறிய அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜனநாயகம் வெல்லவில்லை என அன்புமணி கூறியது எந்த விதத்தில் நியாயம் எனக் கேள்வி எழுப்பினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் தெளிவான தீர்ப்பு அளித்திருப்பதால், பாமகவிற்கு தோல்வி கிடைத்திருக்கிறது எனத் தெரிவித்தார். இந்த வெற்றி என்பது திமுக தலைவர் மு.க,ஸ்டாலினின் நல்ல ஆட்சிக்கு கிடைத்த வெற்றி எனவும், இந்த வெற்றியின் மூலம் தமிழகம் சரியான பாதையில் செல்கிறது எனக் கூறினார்.
2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக விக்கிரவாண்டி தேர்தல் அமையும் என எல்லோரும் கருத்து கூறிய போது, அண்ணாமலை அதை மறுத்து பேசியதாகவும், இவர்கள் செய்த பொய் பிரச்சாரங்கள் அனைத்தும் தோல்வியுற்று இருக்கின்றன என்றும், இந்த தேர்தலில் அதிமுகவுடன் மறைமுகமாகக் கூட்டணி வைத்துக் கொண்டு திமுக வேட்பாளரை நிறுத்தாமல் பார்த்துக் கொண்டார்கள் எனத் தெரிவித்தார்.
இதற்குப் பின்பும் அண்ணாமலையும், அன்புமணியும் மிகப்பெரிய தோல்வியைச் சந்திப்பார்கள் எனவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் இதே போல் தான் மக்கள் முடிவெடுப்பார்கள் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய மாணிக்கம் தாகூர், அடுத்த தேர்தலில் அண்ணாமலை எந்த தொகுதியில் நின்றாலும் தோல்வியடைவார் எனத் தெரிவித்தார்.
நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பெண்கள் சிலர் 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என்றும், குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் திமுக எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர் சீனிவாசன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது பதிலளித்த மாணிக்கம் தாகூர், அதற்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக மாற்றி இருப்போம் எனவும், உங்களுக்கு வேண்டியதைப் போராடி வாங்கித் தருவோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:“பாமக டெபாசிட் வாங்கியதே பெரிய விஷயம்”.. அமைச்சர் பொன்முடி பேச்சு!