சென்னை:டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், டெல்லி காவல்துறையுடன் இணைந்து நடத்திய நடவடிக்கையில், 50 கிலோ சூடோபெட்ரின் என்ற போதைப்பொருளுக்குப் பயன்படுத்தக்கூடிய ரசாயனத்தை மீட்டனர்.
இந்த ரசாயனத்தை தேங்காய் பொடி மற்றும் ஹெல்த் மிக்ஸ் உடன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு கடத்த முயன்ற 3 பேரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். மெத்தம்பேட்டமைன் என்ற போதைப்பொருள்களைத் தயாரிக்க இந்த ரசாயனம் பயன்படுகிறது.
இந்த விசாரணையில், பிடிபட்ட 3 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த கடத்தல் கும்பல் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக டெல்லியை மையமாக வைத்து, 3500 கிலோ கிராம் சூடோபெட்ரின் எனப்படும் ரசாயனத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2000 கோடி ஆகும். இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது யார் என போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் இந்த கும்பலுக்குத் தலைவனாகச் செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமையக அதிகாரிகள், சென்னை மண்டல அதிகாரிகளோடு சேர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், நடிகை கயல் ஆனந்தி நடித்து வெளியாக இருக்கும் 'மங்கை' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரே இந்த கடத்தல் கும்பலுக்குத் தலைவனாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது, தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.