தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (41). இவர் மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு பிரகாஷ் நடத்துநராக பணியாற்றி வந்த பேருந்தில் கொடுவிலார்பட்டியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
அப்போது மகாலட்சுமி தனக்கும், ஆண்டிபட்டியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேந்திர குமார் ஆகியோருக்கும் முக்கிய அரசியல்வாதிகளுடனும், நீதிமன்றத்தில் உயர் அதிகாரிகளுடன் பழக்கம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், எங்களிடம் ரூ.6 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய பிரகாஷ் தனது உறவினரான முத்துக்குமார் என்பவருக்கு அரசு வேலைக்காக, கடந்த 2020 ஆம் ஆண்டு தேனி புதிய பேருந்து நிலையம் அருகே மகாலட்சுமி மற்றும் நாகேந்திரகுமாரிடம் 6 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.
மேலும், மகாலட்சுமி கும்பல் பல்வேறு தேதிகளில் பிரகாஷை போன்ற ஏழு நபர்களிடம், சுமார் 48 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று, போலி அரசு பணி ஆணையினை வழங்கியுள்ளனர். இதே போல் அல்லிநகரத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் 7 நபர்களிடம் பல்வேறு தேதிகளில் நாகேந்திர குமார் 41,50,000 ரூபாய் பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக போலி பணி ஆணையை கொடுத்துள்ளார். இந்நிலையில், பணி ஆணை போலி என்பதை அறிந்த பிரகாஷ், தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.