தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாட்ஜில் தங்கி அசால்டாக பைக், செயின் பறிப்பில் ஈடுபட்ட மகாராஷ்டிரா நபர் கைது! - Chennai Chain snatch cases

Maharashtra chain snatching person arrested: மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து விடுதி எடுத்து தங்கி இருசக்கர வாகனத் திருட்டு மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட அமோல் புகைப்படம்
கைது செய்யப்பட்ட அமோல் புகைப்படம் (Credits to Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 4:39 PM IST

சென்னை: சென்னையில் செயின் பறிப்பு, வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றம் செய்த நபர்களைக் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ஆதம்பாக்கம் கணேஷ் நகரைச் சேர்ந்த பத்மாவதி (61) என்பவர், அப்பகுதியில் உள்ள மெடிக்கல் கடைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்பொழுது, கணேஷ் நகர் 1வது தெருவில் அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், பத்மாவதி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதனால் பதறிய பத்மாவதி, இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அமோல் (32) என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 7 தங்க நகைகள் மற்றும் குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், அமோலை ஆதம்பாக்கம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து, விடுதியில் தங்கி இருந்து இருசக்கர வாகனங்களைத் திருடிய பின்பு, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், அமோல் மீது ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்திலும், திருமங்கலம் காவல் நிலையத்திலும், கடந்த 2021ஆம் ஆண்டு கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், சைதாப்பேட்டை காவல் நிலையத்திலும் பத்து வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தீவிர விசாரணைக்குப் பின்பு அமோல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:நீலகிரியில் அமலுக்கு வந்ததது இ-பாஸ் நடைமுறை! - E Pass Implemented In Nilgiris

ABOUT THE AUTHOR

...view details