சென்னை:தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அதனைத் தாங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் வெயிலின் தாக்கம் மிகக்கடுமையாக இருந்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், நுங்கு போன்ற இயற்கையான குளிர்ச்சி மிகுந்த பொருட்களை அதிகம் வாங்கி உட்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோயம்பேடு 100 அடி சாலை அருகே, இன்று (ஏப்.25) இளநீர் ஏற்றி வந்த லாரியை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் நடத்திய தீவிர சோதனையால், 2 மணி நேரத்தில் லாரியை திருடிச் சென்ற நபர் சிக்கியுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாத் (45). இவர் தினமும் லாரியில் இளநீர்களைக் கொண்டு சென்று, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வியாபாரத்திற்காக விநியோகம் செய்து வருகிறார்.
இவர் வழக்கம்போல இன்றும் லாரியில் இளநீரை ஏற்றிக்கொண்டு விநியோகம் செய்து கொண்டிருந்த போது, கோயம்பேடு 100 அடி சாலை அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர், சாவியுடன் லாரி சாலையில் நிற்பதைக்கண்டு அதை திருடிச் சென்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சிடையைந்த ஜெகன்நாத், லாரியை மடக்கிப் பிடிக்க முயன்றுள்ளார். அதற்குள் அந்த மர்ம நபர் லாரியுடன் தப்பிச் சென்றுள்ளார்.