தென்காசி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தென்காசி தனி தொகுதியில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் ஜான் பாண்டியன் பாஜகவின் 'தாமரை' சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அமமுக பொதுச் செயலாள டிடிவி தினகரன் வேட்பாளர் ஜான் பாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரிக்க தென்காசிக்கு வந்தார். அப்போது குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் விரோத ஊழல் ஆட்சியை ஒழிப்பதற்காக ஒரு முன்னோட்டமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணிக்கு வாய்ப்புளிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பது தான் எங்கள் பிரச்சாரத்தின் நோக்கம்.
என்டிஏ கூட்டணிக்கும் மக்கள் மத்தியில் பிரகாசமான வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் இக்கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். 1970-களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் அன்றைக்கு முதலமைச்சர் கருணாநிதி அவர்களும்தான் இந்த மாபெரும் வரலாற்றுப் பிழைக்கு காரணம்" என கச்சத்தீவு விவகாரம் குறித்து குற்றம்சாட்டினார்.