சென்னை:மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏல அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், அதன் எல்லையை மறுவரையறை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.
இந்த நிலை.யில், இவ்விகாரத்தில் மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் தமிழக அரசின் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கும் பதிலடி அளிக்கும் விதத்தில், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'டங்ஸ்டன் சுரங்க திட்டம் குறித்த ஏலத்தில் அடிப்படை குறைப்பாடுகள் வெளிப்படையாக உள்ளன. இது சட்டம்- ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும். அவ்வாறான சூழல் ஏற்பட்டால் அதனை மாநில அரசு தான் கையாள வேணடி வரும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி (2023 அக்டோபர் 3) மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தேன்.
மேலும், நாயக்கர்ப்பட்டி டங்ஸ்டன் சுரங்க தொகுதி, அரிட்டப்பட்டியின் உயிர் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரிய தளத்தை உள்ளடக்கியது என்ற தகவலை மத்திய சுரங்க அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததை தவிர, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையரின் கடிதத்தில் நில விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. எனவே, இப்பகுதி உயிரியல் பன்முகத்தன்மை கொண்டது என்பதை நன்கு அறிந்ததே, மத்திய சுரங்க அமைச்சகம் இந்த ஏல அறிவிப்பை மேற்கொண்டது.