தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பன் புதிய பாலம் திறப்பு எப்போது? ரயில்வே அதிகாரி அளித்த லேட்டஸ்ட் அப்டேட்! - PAMBAN NEW RAILWAY BRIDGE

ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையர் அளித்த அறிக்கை தொடர்பாக பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நடைபெற்ற ஆய்வுப் பணிகள்
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நடைபெற்ற ஆய்வுப் பணிகள் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 23 hours ago

ராமேஸ்வரம்:ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையர் அளித்த அறிக்கை தொடர்பாக பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தை ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி, ஒரு சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி அறிக்கை அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ரயில்வே துறை அதிகாரிகள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அதனை இன்று மதுரை கோட்ட மேலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாம்பன் கடலில் ரூ.535கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பால பணிகள் முழுமையாக நடைபெற்று முடிந்ததையடுத்து கடந்த நவம்பர் மாதம் ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் இரண்டு நாட்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஒரு சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது அந்த குறைபாடுகளை உடனடியாக சரி செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பாதுகாப்பு ஆணையர் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் ரயில்வே கட்டுமான நிறுவனம் மற்றும் ரயில்வே துறை பொறியாளர் குழு குறைகளை சரி செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் இன்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான ரயில்வே துறை அதிகாரிகள் புதிய ரயில் பாலத்தை நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின் போது மதுரை கோட்ட மேலாளர், ட்ராலி மூலமாக பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு வந்து பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தண்டவாளத்தை முழுமையாக அலைன்மென்ட் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டதுடன் மையப்பகுதியில் அமைந்துள்ள செங்குத்து தூக்கு பாலத்தை இயக்கியும் சோதனை செய்தார். இக்குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் புதிய பாலம் திறப்பு தேதி அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு பின் பேசிய மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா, "பாதுகாப்பு முதன்மை ஆணையர் அளித்த அறிக்கை அடிப்படையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது. பாலம் நல்ல நிலையில் உள்ளது. விரைவில் பாலம் பணிகள் நிறைவு செய்து புதிய பாலம் திறப்பு தேதி அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details