தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 நாட்களில் பரோட்டா மாஸ்டர் ஆவது எப்படி? மதுரையை கலக்கும் பரோட்டா பயிற்சி மையம்! - Madurai PAROTTA COACHING CENTRE - MADURAI PAROTTA COACHING CENTRE

Parotta Coaching Centre: மதுரை மாநகரில் கடந்த 6 ஆண்டுகளாக பரோட்டா தயார் செய்வது எப்படி? என்ற பயிற்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அது குறித்தான ஒரு சிறப்புத் தொகுப்பு.

மதுரையில் செயல்பட்டு வரும் பரோட்டா பயிற்சி மையம்
மதுரையில் செயல்பட்டு வரும் பரோட்டா பயிற்சி மையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 3:56 PM IST

மதுரை பரோட்டா மாஸ்டர் பயிற்சி மையம் (Credit - ETV Bharat Tamil Nadu)

மதுரை:இட்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடும் உணவென்றால் அது பரோட்டாதான் என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். அதிலும் குறிப்பாக மதுரை பரோட்டாவுக்கு உலகெங்கும் வாழும் தமிழர்களிடத்தில் தனிச் சிறப்பு மிக்க இடமுண்டு.

பன் பரோட்டா, நூல் பரோட்டா, வாழை இலை பரோட்டா, கொத்து பரோட்டா, பொரிச்சா பரோட்டா என கலந்துகட்டி அடிக்கும் பரோட்டா ரசிகர்கள் மதுரையின் பரோட்டாக்கடைகளை ஒரு கை பார்க்கத் தவறுவதில்லை. இந்நிலையில்தான் மதுரையில் ' செல்ஃபி பரோட்டா ஸ்கூல்' என்ற பெயரில் பரோட்டா பயிற்சிக்கூடம் ஒன்று துவங்கப்பட்டு, இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாஸ்டர்கள் உருவாக்கியுள்ளனர்.

இவர்களில் சிலர் பல்வேறு நாடுகளில் சராசரியாக மாதமொன்றுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பளம் பெறுகின்றனர். மதுரை தபால்தந்தி நகர் அருகேயுள்ள கலை நகர் 2-ஆவது தெருவில் இயங்கி வரும் 'பரோட்டா பள்ளிக்கூடத்ததிற்கு' ஈடிவி பாரத் சார்பாக ஒரு விசிட் அடித்தோம்.

பரப்பாகவும், மிகவும் சுறுசுறுப்பாக இயக்கிக் கொண்டு இருந்த அந்தப் பயிற்சி வகுப்பறைக்குள் 20க்கும் மேற்பட்ட 'மாணவர்கள்' பரோட்டாவுக்கு மாவு பிசைந்தும், அடித்தும், தட்டியும், வீசியும் சும்மா தூள் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

இவர்களில் ஒரு பெண் பரோட்டா மாஸ்டரும் கற்றுக் கொண்டிருந்தார். மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த அந்தப் பெண் நிர்மலா கூறுகையில், "பரோட்டா மாஸ்டருக்கான படிப்புக் குறித்து அறிந்து இங்கு வந்து சேர்ந்தேன். இன்றைக்கு பரோட்டா மாஸ்டர் என்றாலே ஆண்கள் மட்டும்தான் உள்ளனர்.

ஒரு பெண்ணாக நாமும் இந்தத் தொழில் செய்வோமே என்ற ஆர்வத்தின் பேரில் இங்கு பயிற்சி பெற்று வருகிறேன். இங்குள்ள ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக கற்றுத் தருகின்றனர். பெண்களும் இதைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை இங்கு வந்துதான் தெரிந்து கொண்டேன். பரோட்டா செய்யத் தெரிந்து கொள்ளலாம் என்று வந்த எனக்கு, தற்போது இதையே தொழிலாகச் செய்ய வேண்டும் என்ற அளவுக்கு ஆர்வம் பிறந்துள்ளது" என்றார்.

சென்னை ஆவடியில் ஹோட்டல் நடத்தி வரும் குருசங்கர் கூறுகையில் "என்னுடைய ஹோட்டலில் வேலை செய்யும் பரோட்டா மாஸ்டர்கள் வருவார்கள். சென்றுவிடுவார்கள். தொடர் பணியின் பொருட்டு அவர்கள் கிடைப்பது மிகக் கடினமாக இருந்தது.

ஆதலால் இதனை நாமே கற்றுக் கொண்டால் என்ன என்ற அடிப்படையில், அதுகுறித்த பயிற்சி நிலையங்களைத் தேடிப் பார்த்தேன். சென்னையில் எங்கும் இல்லை. ஆகையால் மதுரையிலுள்ள இந்த பயிற்சி பள்ளிக்கு வந்தேன். இன்றுடன் எட்டு நாள் ஆகிறது" என்றார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விவசாயி ராஜ்குமார் கூறுகையில், "கத்திரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளைப் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறேன். பரோட்டா மாஸ்டராக வேண்டும் என்ற ஆவலுடன்தான் இங்கு பயிற்சி எடுக்க வந்துள்ளேன். இன்றுடன் பத்து நாட்கள் முடிவடைந்துவிட்டன.

எனது பயிற்சியை முடித்து சான்றிதழும் பெற்றுக் கொண்டேன். படிப்பு மட்டும் இந்தக் காலத்தில் போதாது. கூடவே கைத்தொழிலும் அவசியம். அப்போதுதான் பிறர் முன் வாழ்ந்து காட்டுவதோடு, ஜெயித்தும் காட்ட முடியும். நாடு முன்னேற முன்னேற உணவுத்துறையும் பெருமளவில் வளர்ச்சி பெறும். அதன் காரணமாகவே நான் இந்தத் தொழிலைக் கற்றுள்ளேன்" என்றார்.

இது குறித்து செல்ஃபி பரோட்டா பயிற்சி மைய நிறுவனரும், பரோட்டா மாஸ்டருமான முகமது காசிம் கூறுகையில், ”பரோட்டா மாஸ்டர்களுக்கான பிரத்தியேக பயிற்சி மையத்தைக் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இதுவரை மூவாயிரம் நபர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம்.

இந்த பத்து நாள் பயிற்சியில் பரோட்டா வெரைட்டிஸ், சால்னா, கிரேவி, சப்பாத்தி, தோசை என கல்லில் சுடும் அனைத்து உணவுகளுக்கும் தேவையான பயிற்சி வழங்கப்படும். இதுபோக சிக்கன் ரைஸ், நூடுல்ஸ், சில்லி பரோட்டா, சில்லி சிக்கன் என சைனீஸ் உணவுப் பொருள்கள் தயார் செய்வதற்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆண், பெண் இருபாலரும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். கல்வித் தகுதி தேவையில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 'நாங்கள் மூன்று தலைமுறைகளாக உணவுத் துறையில்தான் உள்ளோம். பரோட்டா மாஸ்டர்களுக்கான தேவை அதிகம் உள்ளது. ரூ.800லிருந்து ரூ.1,000 வரை நாளொன்றுக்கு சம்பளம் கொடுத்தாலும் ஆட்கள் கிடைப்பதில்லை.

ஒருபக்கம் வேலையில்லாமல் ஆட்கள் நிறைய பேர் உள்ளனர். இன்னொரு பக்கம் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இந்நிலையில்தான் ஏன் நாமே பயிற்சி கொடுத்து பரோட்டா மாஸ்டர்களை உருவாக்கக்கூடாது என்று சிந்தித்ததன் விளைவுதான் இந்த கோச்சிங் சென்டர்.

ஒரு பேட்ஜ்சில் ஒரு மாதத்திற்கு 200லிருந்து 250 நபர்கள் வரை இங்கே கற்றுச் செல்கின்றனர். கடந்த 40, 50 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் நாங்கள் இருக்கின்ற காரணத்தால் இதிலுள்ள நுணுக்கங்கள் அனைத்தும் தெரியும்.

இந்தத் தொழிலில் எந்த அனுபவம் இல்லாமல் வந்தாலும், அவர்களுக்கு புரியும் வகையில் கற்றுத் தருகிறோம். தண்ணீர், உப்பு எவ்வளவு சேர்ப்பது, உருண்டை பிடிப்பது, பிசைவது, வீசுவது என அனைத்தையும் கற்றுத் தேறுகின்றனர்.

முதலில் துணியில்தான் வீசுவதற்கு பயிற்சி அளிப்போம். பிறகுதான் மாவு பிசைய பயிற்சி அளிக்கப்படுகிறது. வெளியூரிலிருந்து வருகின்ற நபர்கள் தங்குவதற்கு இடவசதி உண்டு. வெளி மாநிலங்களிலிருந்தும் வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ளோருக்கு ஆன்-லைன் வழியாகவும் பயிற்சி அளித்து வருகிறோம்' என்கிறார்.

இதையும் படிங்க:சென்னையில் தொடரும் தெருநாய்கள் பிரச்சனை.. சிறுமியை துரத்திய சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details