மதுரை: மதுரையில் பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜனவரி 15) நடைபெற உள்ள நிலையில், ஆயிரம் காளைகளும் 900 மாடுபிடி வீரர்களும் களமிறங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் முழுவதும் நிறைவடைந்து போட்டிக்கு களம் தயாராகியுள்ளது.
தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறுவது வழக்கம். அதிலும், குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில், மதுரையில் பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று மாட்டுப் பொங்கல் அன்று (ஜனவரி 15) நடைபெற உள்ளது.
இதற்கான, முன்னேற்பாடு பணிகள், மஞ்சமலை ஆற்றில் அமைந்துள்ள வாடிவாசல் பகுதியில், மகாலிங்க சாமி மடத்து கமிட்டி மற்றும் பாலமேடு பேரூராட்சி சார்பாக முழுவதும் நிறைவடைந்துள்ளது.