சென்னை:கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி சென்னை மற்றும் வட தமிழக பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறின.
தொடர்ந்து டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகன மழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுவரை கண்டிராத வெள்ளம் நான்கு மாவட்டங்களிலும் உண்டானது. இந்த இரண்டு வெள்ளத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணமாக தமிழ்நாடு அரசு வழங்கியது.
இந்த இரு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு, நிவாரண பணிக்காக சென்னை உள்ளிட்ட 4 வட மாவட்டங்களுக்கு ரூ.19,692.69 கோடியும், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களுக்கு ரூ.18,214.52 கோடி என மொத்தம் ரூ.37,907.21 கோடி நிவாரண தொகை வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது.
இதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 950 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்தது. தொடர்ந்து மத்திய குழுவும் தமிழ்நாடு வருகை தந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. வெள்ள சேதங்களை சரி செய்ய மத்திய அரசிடம் 38 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு நிவாரணம் கோரிய நிலையில், 950 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. அதேநேரம், கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாத காரணத்தால், கடுமையான வறட்சி நிலவுகிறது. பெங்களூரூ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சொட்டுத் தண்ணீருக்காக மக்கள் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து கர்நாடகா அரசு மாநிலத்தில் மழை பெய்யாததால் வறட்சி நிலவுவதாகவும், பயிர்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், 18 ஆயிரம் கோடி ரூபாய் ,நிவாரண நிதி வழங்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து 10 அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் கர்நாடகத்திற்கு வருகை தந்து வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்தி மத்திய அரசு அறிக்கை சமர்பித்தனர்.
இருப்பினும், மத்திய அரசிடம் இருந்து நிவாரண நிதி கர்நாடக மாநிலத்திற்கு வந்து சேரவில்லை. இதையடுத்து நிவாரண நிதியை விடுவிக்கக் கோரி மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், மத்திய அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மத்தியில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதி பெற்று, கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கி உள்ளது. அதன்படி 18 ஆயிரம் கோடி ரூபாய் கேட்ட கர்நாடக அரசுக்கு 3 ஆயிரத்து 454 கோடி ரூபாயும், 38 ஆயிரம் கோடி ரூபாய் கேட்ட தமிழக அரசுக்கு வெறும் 275 கோடி ரூபாயையும் நிவாரணமாக மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், "கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என 3,454 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடியாகும். பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல... வன்மம்.. தீராத வன்மம்." என்று மத்திய அரசை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க :மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன? - Schools Education Department