தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அதிமுக எம்பிக்கள் கொட்டாவி விடக்கூட வாய் திறக்கவில்லை"- சு.வெங்கடேசன் - SU VENKATESAN ON MINE ACT

"கனிம வளங்கள் திருத்தச் சட்டம் 2023, பாஜகவின் மிருகப் பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது எடப்பாடியாரின் அதிமுக எம்பிக்கள் கொட்டாவி விடக்கூட வாய் திறக்கவில்லை" என திமுக எம்பி சு.வெங்கடேசன் பதிலறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமி, எம்பி சு.வெங்கடேசன்
பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமி, எம்பி சு.வெங்கடேசன் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2024, 2:21 PM IST

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9, 10 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. அதில் முதல் நாள் கூட்டத்தொடர் முடித்து, சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மதுரையில் அமைக்கப்பட உள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கிய பின், திமுக எதிர்ப்பது போல் நாடகம் ஆடுகிறது. உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்திருந்ததால் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட கனிம வளங்கள் திருத்தச் சட்டம் 2023-க்கு மறுப்பு தெரிவித்து, அமளியில் ஈடுப்பட்டிருக்க வேண்டும்," என்றார்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 11) எம்பி சு. வெங்கடேசன் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு பதிலறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கனிம வளங்கள் திருத்தச் சட்டம் 2023 (THE MINES AND MINERALS (DEVELOPMENT AND REGULATION) AMENDMENT BILL, 2023) மக்களவையில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு, 28-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

கார்ப்பரேட்டுகளுக்காக தாரைவார்க்கப்பட்டது:

அந்த நாட்களில் மக்களவை போர்க்களம் போல இருந்தது. இந்தச் சட்டம் தேசத்தின் கனிம வளங்களைப் பெரும் கார்ப்பரேட்டுகளுக்காக தாரைவார்க்கக் கொண்டுவரப்படுகின்ற சட்டம். இது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கிற சட்டம். இதனை ஏற்க முடியாது என அவையின் மையப்பகுதிக்கு மட்டுமல்ல அவைத்தலைவரின் இருக்கைக்கே சென்று முழக்கமிட்டு எங்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தோம்.

எங்களின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாத மோடி அரசு, தனது மிருகப் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு, நாங்கள் சொல்லுகிற எதையும் கேட்காமல் சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தின்படி, வேதாந்தாவின் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தை டங்ஸ்டன் கனிமத்தை எடுக்க அரிட்டாபட்டிக்கு அனுப்பிவைக்கும் திருப்பணியைச் செய்தது மோடி அரசு.

அண்ணாமலை இப்போது கடிதம் எழுதுகிறார்:

ஆனால், அரிட்டாபட்டியிலும், மேலூரிலும் தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு வந்தவுடன், வேகவேகமாக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய கனிம வளத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதுமட்டுமின்றி விவசாயிகளின் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாட்டையும் பிரதமர் மோடி மேற்கொள்ளமாட்டார் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: "சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி" - மேலூர் பகுதி மக்கள் நெகிழ்ச்சி!

தற்போது, அண்ணாமலை அவர்களிடம் நான் கூறுகிறேன், இந்தச் சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நாளன்று மிகச்சிறிய எண்ணிக்கையில் தான் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக நாங்கள் இருந்தோம். அப்போதும் நாங்கள் "இது அதானிக்கான சட்டம் திரும்பப்பெறுக" என அவை அதிர முழங்கினோம். அதை அவர் காணொளி மூலம் பார்க்க வேண்டும். அதானியின் நலனுக்கு எதிராக எதையும் செய்யாத பிரதமரால், இந்தச் சட்டம் விவாதமேதுமின்றி நிறைவேற்றப்பட்டது.

அன்று மக்களவையில் ஐம்பது பேரின் முழக்கம் இன்று அரிட்டாபட்டியில் பல்லாயிரம் பேரின் முழக்கமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அன்று மூர்க்கத்தனமாகச் சட்டம் கொண்டு வந்த நீங்கள், இன்று மக்கள் எதிர்ப்பைக் கண்டு வேகவேகமாகப் பின்வாங்கக் கடிதம் எழுதுகிறீர்கள். அன்று உங்களை ஆதரிப்பதை மட்டுமே அரசியலாகக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, "இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்," என இண்டி கூட்டணியைப் பார்த்து சட்டப்பேரவையில் ஆவேசமாகக் கேட்கிறார்.

எடப்பாடிக்கு பதிலடி

எடப்பாடி அவர்களே இன்று நீங்கள் பேசியதை விட ஆயிரம் மடங்கு ஆவேசத்தோடு, கடந்த ஐந்து ஆண்டுகள் நாங்கள் மோடி ஆட்சியின் கொடுமைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டிருந்தோம். அப்போது நீங்கள் கூட்டணி தர்மம் என்ற பெயரில் நாடளுமன்றத்தில் கூண்டுப் பறவையாக குறுகிக் கிடந்தீர்கள்.

சட்டப்பேரவையில் சண்டமாருதம் செய்யும் உங்கள் கட்சி, நாடாளுமன்றத்தில் கொட்டாவி விடக்கூட வாய் திறக்கவில்லை. உங்களின் புதிய அவதாரம் கடந்த கால பாவங்களை இல்லாமல் செய்துவிடாது. காற்றும், நீரும், வளமும் கார்ப்பரேட்டுகளுக்கானதே எனும் பிரதமர் மோடியின் விசுவாசத்திற்கு யார் துணை நின்றாலும் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்," என குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details