தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் 2024: ஸ்டாலின் முதல் அமித் ஷா வரை... சூடான தேர்தல் களம்! மதுரையில் வெற்றி யாருக்கு? - lok sabha election 2024

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்த தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

மதுரை தொகுதி வேட்பாளர்கள்
மதுரை தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit - Etv Bharat Tamil nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 8:16 PM IST

Updated : May 28, 2024, 8:31 PM IST

மதுரை:மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மேலூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கி உள்ளன. மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை, இத்தொகுதியில் இதுவரை தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை தலா ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. தேசிய கட்சியான காங்கிரஸ் எட்டு முறையும், அதற்கு அடுத்ததாக இடதுசாரி கட்சிகளும் வெற்றிப் பட்டியலில் உள்ளன.

தேசியக் கட்சிகள் ஆதிக்கம்: தேசியக் கட்சிகள் செல்வாக்குடன் திகழும் மதுரை தொகுதியில் இம்முறை திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே மீண்டும் களமிறங்கி உள்ளது. அக்கட்சியின் சிட்டிங் எம்.பி.யான சு.வேங்கடேசன் மீண்டும் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன், பாஜக வேட்பாளராக பேராசிரியர் ராம. சீனிவாசன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மோ.சத்யாதேவியும் மதுரையில் பலபரீட்சை நடத்தி உள்ளனர்.

2024 தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மதுரை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15,82,271 வாக்குகள் உள்ளன. இவற்றில் 9,81,660 வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 62.04.

கணிசமாக குறைந்த வாக்குப்பதிவு:இதுவே, 2019 மக்களவைத் தேர்தலில், மதுரை தொகுதியில் மொத்தமிருந்த 15,39, 024 வாக்குகளில் 10.11.500 வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 66.09. திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் 4, 47,075 வாக்குகளை அள்ளினார். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 44.20 சதவீதம். அதிமுகவின் வி.வி.ராஜ் சத்யன் 3,07,680 (30.42%) வாக்குகளை பெற்று இரண்டாமிடம் பிடித்தார். மக்கள் நீதி மய்யத்தின் அழகர் - 85,048 -( 8.41%), நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் - 42,901 (4.24%) ஓட்டுகளையும் வாங்கினர். குறிப்பாக சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டேவிட் அண்ணாதுரை - 85,757 (8.48%) வாக்குகளை பெற்று அனைத்து கட்சியினரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

கம்யூனிஸ்ட் வெற்றிக்கான காரணங்கள்: 2019 தேர்தலில், சிபிஎம் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் 1,39,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக கூட்டணியின் பலம், மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு குறிப்பிட்ட சதவீதம் உள்ள வாக்கு வங்கி ஆகியவை அவரது வெற்றிக்கு முக்கிய காரணிகளாக கருதப்பட்டன.

ஆனால் இம்முறை, திமுக அதிமுக, பாஜக என்று மதுரையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் கடந்த தேர்தலைப் போலவே கூட்டணி பலம், சொந்தக் கட்சிக்கு தொகுதியில் உள்ள வாக்கு வங்கி ஆகியவற்றின் காரணமாக, சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன் மீண்டும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், அதிமுகவுக்கு வாக்கு வங்கி அதிகமுன்ள தென்மாவட்டங்களில் மதுரை குறிப்பிடத்தக்க தொகுதி என்பதால், திமுக கூட்டணிக்கு அதிமுக வேட்பாளரான டாக்டர் சரவணன் கடும் போட்டியாக இருப்பார் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளரான அக்கட்சியின் மாநில துணை தலைவர் பேராசிரியர் ராம. சீனிவாசனும் தன் பங்கிற்கு வாக்குகளை பிரிப்பார் என்பதால், மதுரையில் திமுக கூட்டணிக்கோ, அதிமுகவோ வெற்றி அவ்வளவு எளிதல்ல என்றே தெரிகிறது.

ஸ்டாலின் முதல் அமித் ஷா வரை மதுரைக்கு படையெடுத்த தலைவர்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி, மு.க. அழகிரி என முக்கிய பிரமுகர்களை டெல்லிக்கு அனுப்பிய வைத்த தொகுதி என்பதால், மதுரையை இந்த முறை எப்படியாவது கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற தீர்மானத்துடன், அனைத்துக் கட்சித் தலைவர்களும் தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக, மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், மாவட்ட நிர்வாகிகளும் தொகுதியில் வாக்குச் சேகரித்தனர்.

குறிப்பாக, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் சு.வெங்டேசனுக்கு ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இவர்களுடன் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும், திமுக மாவட்ட நிர்வாகிகளும் தொகுதி முழுவதும் பம்பரமாய் சுழன்று, தங்களின் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்.

திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் ஒருபுறம் களைகட்டியது என்றால், மறுபுறம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா என்று பல்வேறு தலைவர்கள் அனல்பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டனர். தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், நிர்வாகிகளும் தங்கள் பங்குக்கு, டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக வாக்கு திரட்டினர். அத்துடன் சரவணன் திரை துறையிலும் பிரபலமாக இருப்பதால், கோலிவுட்டை சேர்ந்த சில திரை பிரபலங்களும் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என்று பிரச்சாரம் மேற்கொண்டால், பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் அமித் ஷா மதுரை மாநகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டணி கட்சியான அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தன் பங்குக்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் ஏற்பட்ட காலதாமதம், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்காதது, ஐ.டி. பார்க் வராதது என்று மதுரை தொகுதியில் வரிசைக்கட்டி நிற்கும் பிரச்னைகளுக்கு மத்தியில், 2024 தேர்தலில் இங்கு வெற்றி பெறப் போவது யார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு ஜுன் 4 -இல் விடை தெரிந்துவிடும்.

இதையும் படிங்க:ஜூன் 1ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்.. 'இந்தியா கூட்டணி' புதிய வியூகம்!

Last Updated : May 28, 2024, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details