மதுரை: பொதுவாக வாகனங்களில் உள்ள வைப்பர்கள் (Wipers) ஓட்டுநருக்கு முன்பாக உள்ள கண்ணாடிகளைச் சுத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும். முன்புற கண்ணாடிகளில் ஏதேனும் அழுக்குகள் இருப்பின் அதனை இந்த வைப்பர்கள் துடைத்து சுத்தம் செய்யும். மேலும், இத்துடன் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் உமிழும் அமைப்பின் காரணமாகக் கண்ணாடியைத் தூய்மையாகப் பராமரிப்பதோடு, பயணத்தின் போது எந்தவித இடையூறு ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.
கார்கள் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களிலும் இது போன்ற அமைப்புகள் உள்ள நிலையில் ஆட்டோக்களில் இது போன்ற வசதிகள் இல்லை. ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஆட்டோ போன்ற வாகனங்களில், அதனைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த வசதியைச் செய்து கொடுக்கவில்லை. குறிப்பாக மழைக்காலங்களில் பயணம் மேற்கொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்கள் பெரிதும் சிக்கலைச் சந்திப்பதோடு, சில நேரங்களில் விபத்துக்களுக்கும் ஆளாகின்றனர்.
இந்த ஆட்டோ ஓட்டுநர்களின் நிலையை உணர்ந்த பாமர விஞ்ஞானி அப்துல் ரசாக், மிக மிகக் குறைந்த செலவில் அதற்கான தீர்வினைக் கண்டறிந்துள்ளார். இது ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பெரிதும் மனநிறைவைத் தந்துள்ளது என்பது தான் குறிப்பிடற்குரியது.
மதுரை பீ.பி குளம் பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் மேற்கொண்டு வரும் சேதுராமன் என்பவர் கூறுகையில், "நான் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன். மழைக்காலங்களில் ஆட்டோ ஓட்டும் போது மிகவும் சிரமமாக இருக்கும். கண்ணாடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் நீர்த்தி வலைகளை உடனடியாக இறங்கித் துடைக்க இயலாது. அதேபோன்று பறவைகளின் எச்சம் கண்ணாடி முழுவதும் பரவி சாலையை மறைத்துவிடும்.
எங்களது ஆட்டோ ஸ்டாண்ட் மருத்துவமனை அருகே இருக்கின்ற காரணத்தால், நிறைய நோயாளிகள் எங்களது ஆட்டோக்களைப் பயன்படுத்துவார்கள். அவர்களைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அழைத்துச் செல்லும் போது, மழை, பறவைகள் எச்சம் போன்ற சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள நேரிடும். அப்போது, வாகனத்தை நிறுத்தி விட்டுத் துடைக்கவும் முடியாது. இதற்கு ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பைச் செய்து தர வேண்டும் என பாமர விஞ்ஞானி அப்துல் ரசாக்கிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.
அவர் இரண்டு நாட்கள் இது குறித்து எங்களிடம் முழுவதுமாகக் கேட்டறிந்தார். பின் உடனடியாக ஆட்டோவில் உள்ள வைப்பர் ஓடும் போது அதிலிருந்து, தண்ணீர் உமிழும் வகையில் தீர்வை உருவாக்கிக் கொடுத்தார். இதனால் தற்போது, எந்த சூழ்நிலையிலும் சாலையைத் தெளிவாகப் பார்த்து ஆட்டோவை ஓட்டிச் செல்ல முடிகிறது. மழைக்காலம், இரவு நேரங்களில் எங்களின் முன்னே உள்ள வாகனம் நிற்கிறதா, செல்கிறதா என்பதை எங்களால் பார்க்க முடியாத நிலையில், இந்தக் கண்டுபிடிப்பு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இதற்கான செலவு வெறும் 300 ரூபாய் மட்டும் தான். அதனை இரண்டு சவாரிகளில் நாங்கள் எடுத்து விடுவோம். ஆனால், இதன் மூலம் எங்களை நம்பி ஆட்டோவில் ஏறும் பயணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்கிறோம் என்பதில் எங்களுக்கு மிகவும் திருப்தி" என்றார்.