மதுரை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த உடன் செயல்படுத்தப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரையில் மிக பிரமாண்டமாக ரூ.215 கோடி செலவில் பல்வேறு பிரிவுகளுடன் மிக நவீனமாக அமைக்கப்பட்டது.
குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில், பல்வேறு தலைப்புகளின் கீழ் பல்வேறு பிரிவுகளாக ஆறு தளங்களில் 2 லட்சம் சதுர அடியில் அமைந்த இந்த நூலகத்தை, கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்புப் பிரிவுகளும் இங்கே இயங்கி வருகின்றன. இதில் பார்வையற்ற மாணவர்களும் படிக்கும் வகையில் பிரெய்லி நூல்களும் இடம் பெற்றுள்ளன. இங்கு பிற மாவட்டங்களைச் சேர்ந்தவரும் இந்த நூலகத்திற்கு வந்து பார்வையிடுகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மதுரையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, இந்நூலகத்தின் தரைத்தளத்தில் இடம் பெற்றுள்ள கலைக்கூடம் மற்றும் பார்வையற்றோர் பிரிவில் தண்ணீர் புகுந்ததால், இந்த இரண்டு பிரிவுகளும் மூடப்பட்டன. இந்நிலையில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் இதனை சரி செய்வதற்கு முயன்றனர்.
இதுகுறித்து தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது, "கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மழைநீர் செல்வதற்காக 4 இன்ச் குழாய்கள் மட்டும் போடப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அதிக அளவு நீர் வெளியேறிய காரணத்தால், மழைநீர் குறிப்பிட்ட அந்த இரண்டு பிரிவுகளுக்குள் சென்றது. இதனால் நேற்று இரவே அந்த குழாய்கள் அகற்றப்பட்டு 6 இன்ச் குழாய்கள் போடப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கினாலும் உடனடியாக வெளியேறும் வகையில் சரி செய்யப்பட்டு விட்டது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"வாக்குக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும்" - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்! - CM MK Stalin Slams PM Modi