திருநெல்வேலி:தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர், கடந்த 2018ல் தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலந்து நதி மாசுபடுவதாகவும் அதனை பாதுகாக்க வலியுறுத்தியும் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்து இருந்தார்.
பொதுநல வழக்கு:இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக தடை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்கள். ஆனால் இந்த உத்தரவை பின்பற்றவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முத்தாலங்குறிச்சி காமராசு தொடர்ந்தார்.
நீதிபதிகள் ஆய்வு:அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு கழிவுநீர் கலப்பது தொடர்பாக நேரில் ஆய்வு செய்யப்போவதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்றைய(நவ.10) தினம் நெல்லைக்கு வருகை தந்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டார்.
தொடர்ந்து நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் சிந்து பூந்துறை, உடையார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணி பயணிக்கும் பகுதிகளை ஆய்வு நடத்தினர். அங்கு கழிவுநீர் கலப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், "கழிவுநீர் கலப்பதைத் தடுக்க செயல்படுத்தப்படும் திட்டம் எதுவும் போதுமானதாக இல்லை.
முறையாக கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆய்வு நடத்தும் நிலையில் தற்காலிகமாக அனைத்து இடங்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது" என அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இதனைக் கேட்ட நீதிபதிகள்,"யாரை ஏமாற்றுவதற்கு இது போன்று செயல்படுகிறீர்கள்? முறையாக என்ன திட்டம் செய்யப்பட்டுள்ளது என அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்து மாநகராட்சி அதிகாரிகளைக் கடிந்து கொண்டனர். மேலும் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்கு தற்போது தாமிரபரணி ஆற்றில் செயல்படுத்தப்பட்ட பெரும் திட்டம் முழுவதும் வேஸ்ட் என தங்கள் வேதனையை நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:"சாக்கடை நாற்றத்தில் தான் வசிக்கிறோம்" - தாமிரபரணி ஆய்வுக்கு வந்த நீதிபதிகளிடம் பொதுமக்கள் குமுறல்!
பாதாள சாக்கடை திட்டம்:தொடர்ந்து மாநகராட்சி சார்பில் ஆணையாளர் சுகபுத்திரா பல்வேறு விளக்கங்களை நீதிபதிகள் முன் வைத்தார். தொடர்ந்து தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலக்காமல் இருக்க, முதல் கட்டமாக 12 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டு கழிவுநீர் அனைத்தும் ராமையன்பட்டி பகுதிக்கு கொண்டு சென்று சுத்திகரித்து வருவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட நீதிபதிகள், சுத்திகரிப்பு நிலையத்தில் செய்யப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தவுடன் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்படும் பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு வெளியேறும் தண்ணீரை பாட்டிலில் அடைத்து சோதனை மேற்கொண்டனர்.
மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து ஒவ்வொரு இடத்திலும் நீதிபதிகள் பொறுமையாகக் களத்தில் இறங்கி தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து விளக்கமாகக் கேட்டறிந்தனர். இதன் மூலம் வரும் காலங்களில் தாமிரபரணி ஆற்றில் கழிவீர் கலப்பது தடுக்கப்படும் என்ற நம்பிக்கை பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்