தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதசுவாமி ஆவுடையார் பொன் கவசத்தை மீட்கக் கோரிய வழக்கு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு..! - Ramanathaswamy Avudaiyar Gold Armor

Ramanathaswamy Avudaiyar Gold Armor Case: ராமநாதசுவாமி ஆவுடையார் பொன் கவசம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Ramanathaswamy Avudaiyar Gold Armor Case
Ramanathaswamy Avudaiyar Gold Armor Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 10:49 PM IST

மதுரை: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ராமேஸ்வரத்தில் உலகப் புகழ் பெற்ற ராமநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் ராமாயணக் காலத்துத் தொடர்புடையதோடு, ஸ்ரீ ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் இங்கு உள்ளது.

மேலும், இங்குள்ள ராமநாதசுவாமிக்கு, ராமர் நெய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆவுடையார் பொன் கவசம் கடந்த 2015க்கு பிறகு ராமநாதசுவாமிக்கு அணிவிக்கப்படவில்லை. இதுமட்டும் அல்லாது, இந்த ஆவுடையார் பொன் கவசம் 2015ஆம் ஆண்டு சேதமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆவுடையார் பொன் கவசம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அது குறித்து எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. இதனை அடுத்து, ஆவுடையார் பொன்கவசத்தை ராமநாதசுவாமிக்கு நித்தியப்படி சாத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, ஸ்ரீ ராமரால் ராமநாதசுவாமிக்கு நெய்யப்பட்ட ஆவுடையார் பொன்கவசத்தை மீட்டு, சுவாமிக்கு அதனை நித்யப்படி சாத்த உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலமேகம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆவுடையார் பொன் கவசம் குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்த்த நீதிபதிகள், ஆவுடையார் பொன் கவசம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:பேருந்து மீது லாரி உறசி விபத்து; உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details