மதுரை:மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை மாலை 6.30 மணிக்குப் பிறகும் விடாமல் பெய்தது.
குளமான சாலைகள், போக்குவரத்து பாதிப்பு:இதன் காரணமாக மதுரை நகர்ப்புறப் பகுதி மட்டுமன்றி, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரையின் மையப்பகுதியான கோரிப்பாளையம், தெற்குவாசல், தல்லாகுளம், மாவட்ட நீதிமன்றம், கேகே நகர், அண்ணாநகர் பகுதிகளில், ரோட்டில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாட்டுத்தாவணி மற்றும் பெரியார் பேருந்து நிலையத்திலும், மழைநீர் தேங்கியுள்ளது.
மூடப்பட்ட சுரங்கப்பாதைகள்:இந்த மழையால் மதுரையில் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மணிநகரம் ரயில்வே பால சுரங்கப்பாதை பாதுகாப்புக் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின்போது இச்சுரங்கப்பாதைக்குள் சென்ற கார் ஒன்றில் இரண்டு பேர் தண்ணீரில் சிக்கி மூழ்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் மீட்டனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பாதை முற்றிலுமாக தற்போது மூடப்பட்டுள்ளது.
கண்மாய் பெருகி வீட்டுக்குள் வந்த வெள்ளநீர்:மேலும் மகாத்மா காந்தி நகர் பகுதியிலுள்ள முல்லை நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்த வேலு கூறுகையில், “அருகிலுள்ள ஆலங்குளம் கண்மாய் பெருகி எங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தற்போது மதுரை மாநகராட்சி அதிகாரிகள் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர். முல்லை நகர் மட்டுமன்றி, அருகிலுள்ள மற்ற பகுதிகளிலும் இதே நிலைதான்” என்றார்.