மதுரை:மேலூர் அருகே டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல அறிவிப்பை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி, ஒரு லட்சம் பேருடன் ஜனவரி 7ஆம் தேதி 12 கிலோமீட்டர் தூரம் பேரணியாக சென்று, மதுரை தலைமை அஞ்சல் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, புலிப்பட்டி, வல்லாளபட்டி, மாங்குளம், கிடாரிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வேதந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிட் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் பகுதி மக்கள் தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தியும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மத்திய அரசு டங்ஸ்டன் தற்காலிகமாக ஏல அறிவிப்பை ஒத்திவைப்பதுடன் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் கனிம சுரங்கம் அமைக்க மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.
அதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் ரவி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், டங்ஸ்டன் கனிம சுரங்க மத்திய அரசின் தற்போதைய அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.