மதுரை:மதுரை மாநகர் எஸ்எஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மாநகராட்சி பணியாளராக பணியாற்றி வருகிறார். முன்னதாக இவர் தினமும் வேலைக்கு நடந்து செல்வதை பார்த்த அவரது தாயார், சிறுக சிறுகபணத்தை சேமித்து கடந்த 2002 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த பைக்கில்தான் கடந்த 22 வருடங்களாக கார்த்திகேயன் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தன்னுடைய உறவினரைப் பார்ப்பதற்காக சென்றபோது, தனக்கு சொந்தமான பைக்கை மருத்துவமனை வாசலில் நிறுத்திவிட்டு சென்றார்.
இந்நிலையில் மர்ம நபர்கள் அதனை திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை அதை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசார் ஒரு புறம் வாகனத்தைத் தேடிக் கொண்டு இருக்கும் சூழலில், கார்த்திகேயனும் தனக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் தேடிப் பார்த்துள்ளார்.
இதையும் படிங்க:வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தருமபுரி.. அரசை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்!
இருப்பினும் தற்போது வரை பைக் கிடைக்கவில்லை போல் தெரிகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திகேயன், அந்த பைக் மிகவும் ராசியானது என்பதாலும் தன்னுடைய தாயின் நினைவாக வைத்திருப்பதாலும் தனது ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துத் தருபவருக்குப் பத்தாயிரம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என வண்டியின் புகைப்படத்தோடு சுவரொட்டி அடித்து மதுரை மாநகர் முழுவதும் ஒட்டி உள்ளார். பைக்கின் முன்பக்கத்தில் கார்த்தி என்ற பெயருடன், வேல் படம் ஒன்று வரையப்பட்டுள்ளது.
இது குறித்து கார்த்திகேயன் கூறுகையில் "பைக்கின் விலை தற்போது ரூ.5 ஆயிரத்தில் இருந்து 7 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சுவரொட்டி பார்த்து மனம் இறங்கி திருடிச் சென்றவர்கள் தன்னிடம் கொண்டு வந்து சேர்க்க மாட்டார்களா என்ற ஆதங்கத்தில் இந்த சுவரொட்டியை ஒட்டியுள்ளேன். ஆனால் சுவரொட்டியைப் பார்த்த பலர் எனக்கு ஆறுதல் சொல்கிறார்கள். ஆனால், திருடியவர் பேசவில்லை" என்றார்.
மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.